இரண்டு நாட்களுக்கு முன்னர் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) கபில சந்திரசேனவை மீண்டும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிணை நிபந்தனைகளை அவர் மீறியுள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு (CIABOC) விடுத்த கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த பிடியாணை உத்தரவை இன்று பிறப்பித்துள்ளார். அத்துடன், இந்த பிடியாணையை உடனடியாக அமுல்படுத்துமாறும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டார்.
எயார் பஸ் விமானங்களை கொள்வனவு செய்ததில் இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கடந்த மார்ச் 12ஆம் திகதி கைது செய்யப்பட்ட கபில சந்திரசேனவுக்கு, கடந்த செவ்வாய்க்கிழமை (மே 5) கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியது. 5 இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா 1 மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்க நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
இருப்பினும், சந்தேகநபர் தனது பிணைக்காக கையொப்பமிடவும், தலா 1 மில்லியன் ரூபா பிணையை வழங்கவும் இரண்டு நபர்களுக்கு தலா 15,000 ரூபாவை வழங்கியுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இன்று நீதிமன்றத்திற்கு அறிவித்தது. இந்த நடவடிக்கையின் மூலம் சந்தேகநபர் பிணை நிபந்தனைகளையும், நீதிமன்றத்தின் நம்பிக்கையையும் மீறியுள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரி சுட்டிக்காட்டினார்.
இதன்படி, சந்தேகநபரின் பிணையை இரத்து செய்து, வழக்கின் விசாரணைகள் முடியும் வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறும், சிறையில் இருந்து வெளியேறியுள்ள அவரை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்குமாறும் ஆணைக்குழு விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், அவரை உடனடியாக கைது செய்து ஆஜர்படுத்துமாறு பிடியாணை பிறப்பித்தார்.
2013 ஆம் ஆண்டு 2.3 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 10 எயார் பஸ் விமானங்களை கொள்வனவு செய்ததில் 16 மில்லியன் டொலர்களை இலஞ்சமாகப் பெற சதி செய்ததாகவும், தனது மனைவியின் பெயரில் புருனேயில் போலி நிறுவனமொன்றை ஆரம்பித்து சிங்கப்பூர் வங்கிக் கணக்கில் 1.45 மில்லியன் யூரோக்களை பெற்றதாகவும் கபில சந்திரசேன மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
