Headlines

போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து; ஈரானை எச்சரித்த டிரம்ப் – மத்திய கிழக்கில் உச்சகட்ட பதற்றம்!

தெஹ்ரான்: அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், ஈரான் மீது இன்று இரவு மிகக் கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். இதற்குப் பதிலடியாக, அமெரிக்கா தனது தாக்குதலைத் தொடர்ந்தால், ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாக மூடிவிடுவோம் என ஈரான் பாதுகாப்புத்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மத்திய கிழக்கில் மீண்டும் போர் மேகம் சூழ்ந்துள்ளது.

ஒப்பந்தம் முறிவும், தொடர் தாக்குதல்களும்:

கடந்த மாதம் 17 ஆம் திகதி இரு நாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி, வளைகுடா பகுதியில் பதற்றம் தணிந்திருந்தது. எனினும், ஹார்முஸ் ஜலசந்தியில் குறிப்பிட்ட பாதையை மீறிச் சென்றதாகக் கூறி மூன்று கப்பல்கள் மீது சமீபத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் கடும் கோபமடைந்த அமெரிக்கா, ஈரானின் துறைமுகம் உட்பட 60-க்கும் மேற்பட்ட இலக்குகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரானும் தகுந்த பதிலடி கொடுத்ததையடுத்து, போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக டிரம்ப் அறிவித்தார். மேலும், கார்க் தீவை முழுமையாகக் கைப்பற்றுவோம் எனவும் அவர் மிரட்டல் விடுத்திருந்தார்.

ஹார்முஸ் ஜலசந்தியை மூடும் அபாயம்:

அமெரிக்காவின் இந்த அச்சுறுத்தல்களுக்கு ஈரான் பாதுகாப்புப் படை வட்டாரங்கள் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளன. அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினால், ஹார்முஸ் ஜலசந்தியில் போக்குவரத்தை முழுமையாகக் கட்டுப்படுத்த அல்லது மூடிவிட நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டுத் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. உலகின் 20 சதவீத எண்ணெய் விநியோகம் இந்த வழித்தடத்தின் வழியாகவே நடைபெறுவதால், இது மூடப்பட்டால் சர்வதேச அளவில் பாரிய எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

செயல்கள் மூலம் பதிலளிப்போம்:

டிரம்பின் எச்சரிக்கை குறித்து கருத்துத் தெரிவித்த ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, “நாகரிகமும், உயர்ந்த கலாச்சாரமும் கொண்ட ஈரானியர்களை இழிவான வார்த்தைகளால் விமர்சிப்பது அவர்களின் மகத்துவத்தைக் குறைக்காது. தரக்குறைவான பேச்சுகளுக்கு நாங்கள் அதே வார்த்தைகளால் பதிலளிக்க மாட்டோம். எவ்வித அச்சமுமின்றி, அச்சுறுத்தல்களுக்கு எங்கள் செயல்கள் மூலமாகவே துணிச்சலுடன் பதிலளிப்போம்” என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த நேரடி மோதல் போக்கு, சர்வதேச அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *