Headlines

அரசு ஊழியராக இருந்து எம்.பி. ஆன அர்ச்சுனா: விசாரணையைத் துரிதப்படுத்த நீதிமன்றம் உத்தரவு.

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்யக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, ஆகஸ்ட் 31-ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘அபிநவ நிவஹல் பெரமுன’ அமைப்பின் தலைவர் ஓஷல ஹேரத் தாக்கல் செய்த இந்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மஹென் கோபாலாவ முன்னிலையில் இன்று (02) விசாரணைக்கு வந்தது.

இதன்போது, மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகள் மன்றில் உண்மைகளை முன்வைத்து, மனுவை விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கைக்குப் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.

இதனையடுத்து, குறித்த மனுவை ஆகஸ்ட் 31-ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் திகதி நிர்ணயம் செய்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தேர்தலில் போட்டியிடும்போது அரசாங்க மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றினார் என்பது மனுவின் அடிப்படை வாதமாகும். அரசியலமைப்பு விதிகளின்படி, ஒரு அரசு ஊழியர் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்குத் தகுதியற்றவர் என்றும், இது சட்டத்திற்கு எதிரானது என்றும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *