தமிழ் திரையுலகின் முடிசூடா மன்னனாகவும், கிராமியக் கதைகளின் இமயமாகவும் போற்றப்பட்ட மூத்த இயக்குனர் பாரதிராஜா (84) இன்று காலமானார். தனது தனித்துவமான படைப்புகளால் தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிய அந்த மாபெரும் கலைஞனின் மூச்சு, நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் நிரந்தரமாக நின்றது.
ஸ்டூடியோக்களின் நான்கு சுவர்களுக்குள் முடங்கிக் கிடந்த தமிழ் சினிமாவை, கிராமத்து வயல்வெளிகளுக்கும் மண்வாசனைக்கும் நேரில் அழைத்துச் சென்ற பெருமை இவரையே சாரும். 1941 ஆம் ஆண்டு தேனி மாவட்டத்தில் உள்ள அல்லிநகரம் கிராமத்தில் ‘சின்னசாமி’யாக பிறந்து, ’16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீதேவி என பல ஜாம்பவான்களை தனது முதல் படத்திலேயே செதுக்கிய அந்த சிற்பி, ராதிகா, ராதா, கார்த்திக் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர்.
‘முதல் மரியாதை’, ‘கிழக்கே போகும் ரெயில்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘வேதம் புதிது’ என 40-க்கும் மேற்பட்ட காவியங்களை படைத்த இவரின் திரைப்படங்களில் சாதி ஒழிப்பும், ஆழமான மனித உணர்வுகளும் உயிரோட்டமாக வேரூன்றியிருந்தன. 6 தேசிய விருதுகள் மற்றும் பத்மஸ்ரீ என அவர் குவித்த விருதுகள் ஏராளம். இயக்குநராக மட்டுமன்றி, சமீபத்தில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ போன்ற படங்களில் ஒரு சிறந்த நடிகராகவும் நம் நெஞ்சங்களை வென்றவர்.
மகனின் பிரிவால் வாடிய இதயம்
சினிமாவில் எத்தனையோ உச்சங்களை தொட்ட இந்த இமயம், தனது சொந்த வாழ்க்கையில் சந்தித்த ஒரு பேரிழப்பால் சுக்குநூறாக உடைந்து போனார். தனது ஒரே மகனும், இயக்குநருமான மனோஜ் பாரதிராஜாவின் எதிர்பாராத மறைவு, அவரை தீராத மனவேதனையில் தள்ளியது. அந்த துயரத்திலிருந்து மீள முடியாமல் தவித்த நிலையில், அவரது உடல்நிலையும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
கடந்த சில வாரங்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், பின்னர் வீடு திரும்பி நீலாங்கரை இல்லத்தில் மருத்துவக் கண்காணிப்பில் இருந்தார். எனினும், சிகிச்சை பலனின்றி இன்று அவர் நம்மை விட்டுப் பிரிந்தார்.
அவரது மறைவுச் செய்தி தமிழ் திரையுலகை மட்டுமன்றி, உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான தமிழ் நெஞ்சங்களை பேரதிர்ச்சியிலும், மீள முடியாத சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. பாரதிராஜா என்ற அந்த கிராமத்துச் சிட்டு இனி இல்லை என்றாலும், அவர் படைத்த மண்வாசனை காவியங்கள் காலத்திற்கும் அவர் பெயரைச் சொல்லிக் கொண்டே இருக்கும்.
