டெல்லி: இந்திய அரசியல் வரலாற்றில் இது ஒரு புதிய அத்தியாயம். பிரதமர் நரேந்திர மோடி, சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதமர் அதிக நாட்கள் தொடர்ந்து பதவியில் நீடித்த சாதனையை அதிகாரப்பூர்வமாக முறியடித்துள்ளார். நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நீண்ட கால சாதனையை அவர் கடந்துள்ளார்.
நாட்டின் முதல் பிரதமராக 1952ல் பதவியேற்ற ஜவஹர்லால் நேரு, 1964 வரை தொடர்ச்சியாக 4,398 நாட்கள் பிரதமராகப் பணியாற்றினார். கடந்த 62 ஆண்டுகாலமாக அசைக்க முடியாததாக இருந்த இந்தச் சாதனையை, பிரதமர் மோடி ஜூன் 10ம் தேதியுடன் 4,399 நாட்களை எட்டி வெற்றிகரமாகத் தகர்த்துள்ளார். இந்த வரலாற்றுப் பயணத்தில், முன்னதாக 2025ல், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 4,077 நாட்கள் சாதனையும் அவர் முறியடித்தது குறிப்பிடத்தக்கது.
2014ல் முதன்முறையாகப் பதவியேற்ற பிரதமர் மோடி, மக்களின் பேராதரவோடு தொடர்ந்து 3-வது முறையாக நாட்டின் பிரதமராகத் தற்போதும் நீடித்து வருகிறார். அவரது இந்த அசாத்திய மைல்கல், வெறும் பதவிக்கால நீட்டிப்பு மட்டுமல்ல, இது நாட்டின் நிர்வாகக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாபெரும் பரிணாம வளர்ச்சியைக் காட்டுகிறது. நேரு காலத்தின் அரசாங்கத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கிய நிர்வாக முறை மாறி, மோடியின் 10 வருட ஆட்சியில் அது முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. கொள்கை அளவில் மட்டுமே இருந்த நலத்திட்டங்கள், நவீன தொழில்நுட்ப உதவியுடன் நேரடியாக மக்களைச் சென்றடைகின்றன. அரசு நடைமுறைகளில் இருந்த லஞ்சம், காலதாமதம் மற்றும் இடைத்தரகர்கள் ஒழிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணமாக இருப்பது டிஜிட்டல் அதிகாரமும், வங்கிச் சேவைகளும்தான். குறிப்பாக, ஜன் தன் கணக்கு, ஆதார் மற்றும் மொபைல் எண்களை இணைத்த கட்டமைப்பிலான நேரடிப் பணப்பரிமாற்ற முறை (DBT) மூலம், அரசு வழங்கும் நிதி எந்தவிதமான கசிவுமின்றி மக்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் சேர்கிறது. அத்துடன், கான்கிரீட் வீடுகள், கழிப்பறைகள், இலவச சமையல் கேஸ் மற்றும் குழாய் வழி குடிநீர் போன்ற மக்களின் அடிப்படைத் தேவைகளை உரிமையாகவே தற்போதைய அரசு மாற்றியுள்ளது.
ஒரு காலத்தில் ‘பாம்பு பிடிப்பவர்களின் தேசம்’ என்று கேலி செய்த வெளிநாட்டவர்கள், இன்று இந்தியாவின் அசுர வளர்ச்சியைக் கண்டு வியக்கிறார்கள். முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி மற்றும் நேருவின் சாதனைகளை முறியடித்துள்ள பிரதமர் மோடியின் இந்த பயணம், இந்தியாவின் அரசியல் ஸ்திரத்தன்மையையும், உலகளாவிய பொருளாதார வல்லமையையும் பறைசாற்றும் ஒரு வரலாற்றுச் சகாப்தமாகும்.
