Headlines

இன்றைய வானிலை அறிக்கை – 25 மே 2026: தீவிரமடையும் தென்மேற்கு பருவக்காற்று; பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

இலங்கைக்கு மேல் தென்மேற்கு பருவக்காற்று படிப்படியாக நிலைபெற்று வருகின்றது. இதன் காரணமாக, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு மழைவீழ்ச்சி அதிகரிக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதன்படி, மேல், சபரகமுவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பகுதிகளின் சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் மதியம் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தெற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக ஏற்படும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *