லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் திருவிழாவின் உச்சக்கட்டமான இறுதிப் போட்டி, கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச மைதானத்தில் இன்று (8) இரவு பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மத்தியில் நடைபெறவுள்ளது. சாம்பியன் பட்டத்தைத் தக்கவைக்க ஜஃப்னா கிங்ஸ் அணியும், முதல்முறையாகக் கிண்ணத்தை வெல்ல கோல் கெலன்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் ஆதிக்கம் செலுத்திய ஜஃப்னா கிங்ஸ் முதலிடத்தையும், கோல் கெலன்ட்ஸ் இரண்டாம் இடத்தையும் பிடித்திருந்தன. இதற்கமைய இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது தகுதிப் போட்டியில் (Qualifier 1), ஜஃப்னா கிங்ஸ் அணி திரில் வெற்றி பெற்று நேரடியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
மறுபுறம், வெளியேற்றப் போட்டியில் (Eliminator) வெற்றி பெற்று வந்த கொழும்பு கெப்ஸ் அணியை, இரண்டாவது தகுதிப் போட்டியில் (Qualifier 2) துவம்சம் செய்த கோல் கெலன்ட்ஸ் அணி, மீண்டும் ஜஃப்னா கிங்ஸை இறுதிப் போட்டியில் எதிர்கொள்ளும் வாய்ப்பைப் பெற்றுக்கொண்டது.
ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
