Headlines

கல்முனையில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் கஞ்சி வழங்கலும்

தமிழினப் படுகொலையின் வலியையும் பேரிழப்புகளையும் நெஞ்சில் சுமந்து, மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தாயகப் பகுதிகள் எங்கும் இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, அம்பாறை மாவட்டம் கல்முனையிலும் மக்கள் தங்களின் அஞ்சலியைச் செலுத்தினர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று (18.05.2026) கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட பாண்டிருப்பு பகுதியில் இந்த விசேட நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இறுதிப்போரின் போது முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்கள் எதிர்கொண்ட பட்டினியையும், பெருந்துயரத்தையும் நினைவுபடுத்தும் வரலாற்றுப் பதிவான ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ இந்த நிகழ்வின் போது பொதுமக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன், போரில் தம்முயிரை நீத்த உறவுகளுக்கும், படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கும் இதன்போது சுடரேற்றி, மலர்தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தப்பட்டது. வரலாற்றுத் துயரத்தின் வலிகளைப் பகிர்ந்துகொள்ளும் நோக்கில் அமைந்த இந்த நிகழ்வில் பிரதேச மக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *