2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான தற்போதைய விசாரணைகள் நிமித்தம், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனு மீதான கட்டளையை செப்டம்பர் 22 ஆம் திகதி வழங்குவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (03) தீர்மானித்தது.
இதன்படி, இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதா அல்லது ஆரம்பக் கட்டத்திலேயே தள்ளுபடி செய்வதா என்பது குறித்து நீதிமன்றம் செப்டம்பர் 22 ஆம் திகதி தீர்ப்பளிக்கும்.
மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திசாநாயக்க ஆகியோர் அடங்கிய இருவர் கொண்ட நீதியரசர்கள் ஆயத்தின் முன்னிலையில் இந்த மனு நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டபோது, மனுதாரர் மற்றும் பிரதிவாதிகள் இருசாராரினதும் சட்டத்தரணிகள் தங்களது வாய்மூல சமர்ப்பணங்களை நிறைவு செய்தனர்.
இந்த மனுவில், கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் ஷானி அபேசேகர, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோரைப் பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டுள்ளார்.
