Headlines

ஜனாதிபதியிடம் இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கைகள் சமர்ப்பிப்பு!

இலங்கை மத்திய வங்கியின் “2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த பொருளாதார ஆய்வு” மற்றும் “2025ஆம் ஆண்டுக்கான நிதி அறிக்கைகள் மற்றும் செயற்பாடுகள்” ஆகிய அறிக்கைகள், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஜனாதிபதியுமான அநுர குமார திஸாநாயக்கவிடம் இன்று (20) ஜனாதிபதி செயலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

இந்த இரு அறிக்கைகளையும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இலங்கை மத்திய வங்கியின் பிரதான வெளியீடான ‘2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த பொருளாதார ஆய்வு’, இலங்கை பொருளாதாரம் முந்தைய ஆண்டுகளில் எட்டிய முன்னேற்றத்தை மேலும் பலப்படுத்தியுள்ளதை சுட்டிக்காட்டுகிறது. இது மக்ரோ பொருளாதார ஸ்திரத்தன்மையைத் தொடர்ந்து பேணுதல் மற்றும் கொள்கை மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் சாத்தியமாகியுள்ளது.

வர்த்தகம் மற்றும் புவிசார் அரசியல் முன்னேற்றங்களால் எழும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள், அத்துடன் 2025ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நிலவிய மோசமான வானிலை நிலவரங்கள் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் மத்தியிலும், உள்நாட்டு பொருளாதார நடவடிக்கைகள் மீளெழுச்சித் திறனை (resilience) வெளிப்படுத்தியுள்ளன என்றும் அது மேலும் குறிப்பிடுகிறது.

மேம்பட்ட மக்ரோ பொருளாதார நிலைமைகள் மற்றும் சிறந்த கொள்கை ஸ்திரத்தன்மை ஆகியவை முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளன. இதனால் அதிர்ச்சிகளை சிறப்பாகத் தாங்குவதற்கான தக்காப்புகளை (buffers) உருவாக்கும் பொருளாதாரத்தின் திறன் வலுவடைந்துள்ளதுடன், நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளதாகவும் அந்த அறிக்கை வலியுறுத்துகிறது.

இந்நிகழ்வில் தொழிலாளர் அமைச்சரும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *