வருடாந்த சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான வெளிப்படுத்தல்களை ஜூன் 30ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், தவறினால் கட்டாயத் தண்டனைகள் விதிக்கப்படும் என்றும் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு (CIABOC) அனைத்து அரச அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளது.
இது தொடர்பாக விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க, காலக்கெடுவுக்கு முன் சொத்து விபரங்களை சமர்ப்பிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும், அது “தவிர்க்க முடியாதது மற்றும் கணிசமானது” என்றும் கூறினார்.
2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 80(1) பிரிவின் கீழ், நியமிக்கப்பட்ட அனைத்து நபர்களும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 30ஆம் திகதிக்குள் தங்கள் வெளிப்படுத்தல்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்த விதிமுறையைப் பின்பற்றாதவர்கள் சட்ட நடவடிக்கைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார்.
அனைத்து விண்ணப்பங்களும் 2026 மார்ச் 31ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட்ட மையப்படுத்தப்பட்ட மின்னணு அமைப்பின் (centralized electronic system) மூலம் மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும், வேறு எந்த மாற்று முறைகளும் ஏற்கப்பட மாட்டாது என்றும் பணிப்பாளர் நாயகம் திஸாநாயக்க வலியுறுத்தினார்.
சொத்து வெளிப்படுத்தல்களைச் சமர்ப்பிப்பது என்பது ஒரு சட்டரீதியான சிவில் பொறுப்பாகும் என்றும், இது லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் ஒரு நிர்வாகச் செயல்பாடு அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆணைக்குழுவின் கூற்றுப்படி, 2023 ஆம் ஆண்டின் ஊழல் எதிர்ப்புச் சட்டம் சொத்து விபரங்களை வெளிப்படுத்த வேண்டிய நபர்களின் வகைகளை விரிவுபடுத்தியுள்ளது.
புதிதாக உள்வாங்கப்பட்ட பிரிவினர்:
- சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 115 ஆம் பிரிவின் கீழ் வரும் கப்பல் துறை எழுத்தர்கள் (Wharf Clerks).
- தொழிற்சங்கங்களின் நிறைவேற்று அதிகாரிகள்.
- பதிவுசெய்யப்பட்ட அச்சு மற்றும் மின்னணு ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஆசிரியர் குழுவினர்.
- விளையாட்டுச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட விளையாட்டுச் சங்கங்களின் அதிகாரிகள்.
- அரசு மற்றும் மாகாண அரச சேவையின் அனைத்து முகாமைத்துவ தர அதிகாரிகள் (management-grade officers).
தகுதியுடைய அனைத்து நபர்களும் உடனடியாக இந்த விதிமுறைக்கு இணங்குமாறு லஞ்ச ஊழல் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு 1954 என்ற அவசர அழைப்பு இலக்கத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
