திருகோணமலையில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் மத்திய வங்கியின் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகளின் பங்கேற்புடன் டிஜிட்டல் கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டமொன்றை இலங்கை மத்திய வங்கி (CBSL) ஏற்பாடு செய்துள்ளது.
அரசு அதிகாரிகள், வர்த்தக சமூகம் மற்றும் பொதுமக்கள் மத்தியில் டிஜிட்டல் கொடுப்பனவு முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இத்திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது.
இத்திட்டம் திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள வாகன நிறுத்துமிடத்தில் ஜூன் 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் ஏனைய தரப்பினரின் பங்களிப்புடன் நடைபெறும் என மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி நிறுவனங்கள் மற்றும் ஏனைய தரப்பினருடன் இணைந்து ‘டிஜிட்டல் கொடுப்பனவுகள் மூலம் எதிர்காலத்தை வடிவமைப்போம்’ என்ற கருப்பொருளின் கீழ் மத்திய வங்கியால் ஆரம்பிக்கப்பட்ட நாடு தழுவிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்நிகழ்வு அமைகிறது.
ஹம்பாந்தோட்டை, நுவரெலியா, தம்புள்ளை மற்றும் குருநாகல் ஆகிய பிரதேசங்களிலும் இதுபோன்ற ஊக்கவிப்பு நிகழ்வுகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டு, பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் டிஜிட்டல் கொடுப்பனவுகளின் வசதிகளையும் நன்மைகளையும் அனுபவிக்க வழிவகுத்தன.
இந்நிகழ்வின் போது, வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் மின்சாரப் பணச் சேவை வழங்குநர்கள் உட்பட நிதி நிறுவனங்களிடமிருந்தும், அத்துடன் இலங்கையில் LANKAQR மற்றும் ஏனைய வங்கிகளுக்கு இடையிலான டிஜிட்டல் கொடுப்பனவு முறைகளை இயக்கும் LankaPay (Pvt.) Ltd நிறுவனத்திடமிருந்தும் பொதுமக்கள் தமக்குத் தேவையான ஆலோசனைகளைப் பெற்று, பரந்த அளவிலான டிஜிட்டல் கொடுப்பனவு சேவைகளைப் பதிவு செய்து திறம்பட பயன்படுத்த முடியும் என மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
டிஜிட்டல் கொடுப்பனவுகளின் வசதியை நடைமுறையில் அனுபவிக்கும் வகையில், பங்கேற்பாளர்கள் நிகழ்வு வளாகத்தில் அமைந்துள்ள வர்த்தகக் கடைகளில் இருந்து பரந்த அளவிலான பொருட்கள் மற்றும் சேவைகளைத் தள்ளுபடி விலையில் கொள்வனவு செய்யும் வாய்ப்பைப் பெறுவார்கள். அத்துடன், திருகோணமலை நகர்ப் பகுதியில் வர்த்தக நிறுவனங்கள் LANKAQR கொடுப்பனவு ஏற்றுக்கொள்ளும் வசதியைப் பெற்றுக்கொள்வதற்காக நிதி நிறுவனங்கள் வர்த்தகர்களை இணைக்கும் நடவடிக்கையையும் முன்னெடுக்கும் என மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
