கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தின் வாக்குப்பதிவு 73.63 சதவீதமாக இருந்தது. ஆனால், இந்த முறை வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது என்று சொல்ல வேண்டும் என்றால், அது 82.72 சதவீதத்தைத் தாண்ட வேண்டும்.
“அது எப்படி? 73.63 சதவீதத்திற்கு மேல் பதிவானாலே அது அதிக வாக்குப்பதிவு தானே?” என்ற சந்தேகம் பலருக்கும் எழலாம். இதற்குப் பின்னால் வாக்குப்பதிவு எண்ணிக்கைக்கும், சதவீதத்திற்கும் இடையிலான ஒரு சுவாரஸ்யமான கணிதக் கணக்கு உள்ளது.
சதவீதமும் எண்ணிக்கையும்: என்ன வித்தியாசம்? உதாரணமாக, 1,000 வாக்காளர்கள் உள்ள ஒரு தொகுதியில் 600 பேர் வாக்களித்தால் அது 60% ஆகும். ஆனால், வாக்காளர் பட்டியலில் இருந்து 100 பேர் நீக்கப்பட்டு, மீதமுள்ள 900 பேரில் அதே 600 பேர் வாக்களித்தால், வாக்குப்பதிவு 66.6% ஆக உயர்ந்துவிடும். இங்கு வாக்களித்தவர்களின் எண்ணிக்கை மாறவில்லை, ஆனால் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்ததால் வாக்கு சதவீதம் கணிசமாக அதிகரித்துள்ளது.
தமிழகத்தின் தற்போதைய நிலை என்ன? இதை அப்படியே ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பொருத்திப் பார்ப்போம்.
- 2021-ல் மொத்த வாக்காளர்கள்: 6.37 கோடி
- பதிவான வாக்குகள்: 4.69 கோடி (வாக்கு சதவீதம் 73.63%)
ஆனால், தற்போது மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்குப் (SIR) பிறகு, மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5.67 கோடியாகக் குறைந்துள்ளது. எனவே, கடந்த முறை வாக்களித்த அதே 4.69 கோடி பேர் இம்முறையும் வாக்களித்தாலே, தமிழ்நாட்டின் மொத்த வாக்குப்பதிவு சதவீதம் தானாகவே 82.72% ஆக உயர்ந்துவிடும்.
உண்மையான சாதனை எப்போது? சுருக்கமாகச் சொன்னால், வெறும் வாக்கு சதவீதம் அதிகரிப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. கடந்த முறையை விட ஒருவராவது அதிகமாக வாக்களித்திருக்க வேண்டும் என்றால் (அதாவது 4,69,07,744 பேர் வாக்களித்திருந்தால்), அப்போதுதான் தமிழகத்தில் உண்மையான வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது என்று அர்த்தம். எனவே, வாக்குப்பதிவு சதவீதம் எப்போது 82.72%-ஐத் தாண்டிச் செல்கிறதோ, அப்போதுதான் ஜனநாயகத்தின் திருவிழாவில் மக்களின் பங்கேற்பு உண்மையாகவே அதிகரித்துள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
