சென்னை: 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி இரண்டு நாட்களே ஆன நிலையில், அரசியல் களம் அதிரடித் திருப்பங்களைக் கண்டு வருகிறது. திராவிடப் பேரியக்கங்களை வீழ்த்தி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களைப் பிடித்து ஆட்சிக்கட்டிலின் அருகே நின்றாலும், ஆட்சியமைக்கத் தேவையான 118 என்ற மேஜிக் எண்ணை எட்ட முடியாமல் தவித்து வருகிறது.
இந்தச் சூழலில், கடந்த மூன்று நாட்களாக விஜய்க்கு வழங்கப்பட்டு வந்த முதலமைச்சருக்கான சிறப்பு கான்வாய் பாதுகாப்பு திடீரென வாபஸ் பெறப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பதட்டத்தின் பின்னணி என்ன?
தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் சில எம்.எல்.ஏ.-க்களின் ஆதரவு தேவைப்படுகிறது. காங்கிரஸ் ஆதரவு அளித்தாலும் 113 இடங்களே உள்ளன. மீதமுள்ள இடங்களுக்காக விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க விஜய் உரிமை கோரிய நிலையில், 118 எம்.எல்.ஏ.-க்களின் பட்டியலை வழங்குமாறு ஆளுநர் கறாராகக் கேட்டுள்ளார். இதனால் பதவியேற்பு விழா தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
பரவிய வதந்தியும், அரண்ட தவெகவும்:
இந்த இக்கட்டான நேரத்தில், இணையத்தில் ஒரு புதிய தகவல் தீயாகப் பரவியது. தவெக ஆட்சியமைப்பதைத் தடுக்க, அரை நூற்றாண்டு காலப் பகைவர்களான திமுக-வும், அதிமுக-வும் கைகோர்த்து ‘கூட்டணி ஆட்சி’ அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக வதந்திகள் கிளம்பின. அரசியல் விமர்சகர்கள் சிலரும் இந்தக் கருத்தைப் பதிவிட, அரசியல் வட்டாரத்தில் பதட்டம் தொற்றிக்கொண்டது.
இந்நிலையில், புதன்கிழமை இரவு பட்டினப்பாக்கம் அலுவலகத்திலிருந்து நீலாங்கரை வீட்டிற்கு விஜய் புறப்பட்டபோது, அவருக்கு வழங்கப்பட்டிருந்த கான்வாய் வாகனங்கள் திடீரென விலக்கப்பட்டு, தலைமைச் செயலகம் நோக்கிச் சென்றன. காவல்துறையினர் மட்டுமே விஜய்யுடன் சென்றனர்.
திமுக-அதிமுக கூட்டணி வதந்திக்கும், கான்வாய் விலகலுக்கும் முடிச்சுப்போட்டுப் பார்த்த தவெக தொண்டர்கள் அதிர்ச்சியில் அரண்டுபோனார்கள்.
உண்மையான காரணம் என்ன?
ஆனால், அரசியல் வட்டாரங்கள் கான்வாய் விலக்கத்திற்கு வேறு காரணத்தைச் சொல்கிறார்கள். விஜய் இன்னும் முதல்வராகப் பதவியேற்காத நிலையில், அவருக்கு எப்படி முதலமைச்சருக்கான சிறப்பு கான்வாய் வழங்கப்பட்டது என ஆளுநர் ஆர்லேகர் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதன் காரணமாகவே பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டதாகவும், அவர் முறைப்படி பதவியேற்றதும் மீண்டும் அதே பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
காரணம் எதுவாக இருந்தாலும், அடுத்தடுத்து நடந்த இந்த நிகழ்வுகள் தவெகவினரை ஒரு நிமிடம் ஆட்டிப்பார்த்தது என்னவோ உண்மை.
