வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் புதிய தாக்குதல்களை நடத்தியுள்ளது. அதே நேரத்தில், ஈரான் முழுவதும் உள்ள பல்வேறு இலக்குகள் மீது அமெரிக்கா இரவோடு இரவாகத் தாக்குதல்களைத் தொடர்ந்தது.
ஜோர்தான், குவைத் மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட பிராந்தியத்தில் உள்ள இலக்குகளைத் தாக்கியதாக தெஹ்ரான் தெரிவித்துள்ளது. ஆறாவது நாளாகத் தொடரும் மோதல்களால், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இரு நாடுகளுக்கும் இடையிலான ஆரம்ப உடன்படிக்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஹோர்முஸ் நீரிணையில் “அப்பாவி மாலுமிகளை அச்சுறுத்தும் ஈரானின் திறனைக் குறைப்பதற்காக”, ஈரான் முழுவதும் பல இடங்களில் ஆறு மணி நேரத் தாக்குதலை நடத்தியதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
ஈரான் மீண்டும் பேச்சுவார்த்தைக்குத் திரும்பாவிட்டால் மேலும் இராணுவ நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்ததைத் தொடர்ந்து இந்தச் சமீபத்திய தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. முன்னதாக செவ்வாய்க்கிழமை, பேச்சுவார்த்தைக்குத் திரும்பாவிட்டால் ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்பைக் குறிவைக்கப் போவதாக ட்ரம்ப் அச்சுறுத்தியிருந்தார்.
இது குறித்து ஈரானின் முக்கிய பேச்சுவார்த்தையாளர் மொஹம்மட் பாகர் காலிபாப் அரச ஊடகத்திடம் கருத்துத் தெரிவிக்கையில், நாட்டிற்குப் பயனளிக்காத எந்தவொரு உடன்படிக்கையையும் கடைப்பிடிக்க ஈரானுக்கு “எந்தக் காரணமும் இல்லை” என்று குறிப்பிட்டார். ஹோர்முஸ் நீரிணையில் “ஈரானிய ஏற்பாடுகளை” பராமரிப்பது ஈரானின் தேசிய பாதுகாப்பைப் பொறுத்தது என்றும் அவர் கூறினார்.
சமீபத்திய தாக்குதல்களில், துறைமுக நகரமான பந்தர் அப்பாஸ் மற்றும் கிரேட்டர் டுன்பு தீவு உள்ளிட்ட ஈரான் முழுவதும் உள்ள கட்டளை மையங்கள், வான் பாதுகாப்பு தளங்கள் மற்றும் கடலோரக் கண்காணிப்பு வசதிகளை அமெரிக்கா குறிவைத்துத் தாக்கியதாக அமெரிக்க மத்திய கட்டளைப்பீடம் (Centcom) தெரிவித்துள்ளது. ஈரான் முழுவதும் வெடிச்சத்தம் கேட்டதாகவும், தெஹ்ரானில் வான் பாதுகாப்பு அமைப்புகள் இயக்கப்பட்டதாகவும் ஈரானிய அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதனைத் தொடர்ந்து, வளைகுடாவில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள் தாக்குதல்கள் குறித்து அறிவித்தன. குவைத் இராணுவம் ட்ரோன் தாக்குதல்களை இடைமறித்ததாகக் கூறியது, அதே நேரத்தில் பஹ்ரைன் உள்நாட்டு அமைச்சு அமைதி காக்குமாறும் அருகிலுள்ள பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறும் குடிமக்களைக் கேட்டுக்கொண்டது. ஈரானிய இராணுவம் ஜோர்தானில் உள்ள அமெரிக்கத் தகவல் தொடர்பு அமைப்புகள் மற்றும் எரிபொருள் சேமிப்பு நிலையங்களையும் குறிவைத்துத் தாக்கியுள்ளது.
மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானின் கடலோரத்தில் உள்ள முக்கிய நீர்வழியான ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டுள்ளது. ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஈரான் அதனைத் தடுத்துள்ளது.
ஈரான் மீதான அமெரிக்க முற்றுகைக்குப் பதிலடியாக, “அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் நலன்களுக்கு உதவும் பிற எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதிப் பாதைகளையும் மூடுவதற்கு எதிர்பார்க்க வேண்டும்” என்று ஈரானின் புரட்சிகர காவல்படை அமெரிக்காவை எச்சரித்தது.
ஹோர்முஸ் நீரிணை தொடர்பான சர்ச்சை தொடர்வதால், முக்கிய கப்பல் போக்குவரத்துப் பாதை வழியாகத் தொட்டி கப்பல் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்ததால், உலக அளவில் எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
மோதல்கள் தொடர்ந்தாலும், ஈரானில் கைதியாக இருந்த டேனா கராரி என்ற அமெரிக்கப் பெண் விடுவிக்கப்பட்டதை ஜனாதிபதி ட்ரம்ப் வரவேற்றுள்ளார். இது ஒரு நல்லெண்ண சிக்ஞை என்று அவர் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
