முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று (18) தாயகம் எங்கும் மிகுந்த வலியோடும் உணர்வுபூர்வமாகவும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
தாயகம் கோரிய உரிமைப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களை நீத்த உறவுகளையும், இறுதிப்போரில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களையும் நினைவுகூர்ந்து தமிழர் தாயகப் பகுதிகளில் தொடர்ச்சியாக பல்வேறு அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த துயர்மிகு நாளின் முக்கிய நிகழ்வாக, முள்ளிவாய்க்கால் மண்ணில் நேரடியாக தமது கண்ணீர் அஞ்சலியைச் செலுத்தும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பலரும் ஒன்றிணைந்து முள்ளிவாய்க்கால் நோக்கிப் பயணித்துள்ளனர்.
இழந்த உறவுகளுக்கான நினைவுகளைச் சுமந்துகொண்டு அறவழியில் அணிதிரண்ட இந்த மாணவர்களின் பயணம், ஈழத் தமிழர்களின் வலியையும் நீதிக்கான குரலையும் அடுத்த தலைமுறைக்கும் கடத்தும் ஒரு முக்கிய வெளிப்பாடாக அமைந்துள்ளது.
