சர்வதேச தொழிலாளர் தினமான இன்று (01), இலங்கையிலுள்ள அரசியல் கட்சிகள் சார்பில் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான பேரணிகள், கூட்டங்கள் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பல முக்கிய நிகழ்வுகள் கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ளன.
இதன்படி, ஆளும் தேசிய மக்கள் சக்தி (NPP) இவ்வாண்டு 21 மாவட்டங்களில் 21 மே தினப் பேரணிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளது.
அதேவேளை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நுவரெலியா மற்றும் மகரகமவில் நடைபெறும் பேரணிகளில் கலந்துகொள்ள உள்ளார்.
எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) தனது மே தினப் பேரணியை மாளிகாவத்தையிலுள்ள பி.டி. சிறிசேன மைதானத்தில் நடத்தவுள்ளது. ‘சர்வஜன பலய’ அமைப்பின் நிகழ்வு கொழும்பு ஹென்றி பெட்ரிஸ் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) பொரள்ளையிலுள்ள கெம்பல் பூங்காவிலும், முன்னிலை சோசலிசக் கட்சி (FSP) கொழும்பு ஹைட் பார்க் மைதானத்திலும் தத்தமது மே தினப் பேரணிகளை நடத்தவுள்ளன.
இதற்கிடையில், மே தின ஊர்வலங்கள் மற்றும் பேரணிகளில் பெருமளவிலான மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இலங்கை பொலிஸார் கொழும்பு மற்றும் ஏனைய நகரங்களை மையப்படுத்தி விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளையும் போக்குவரத்துத் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தியுள்ளனர்.
