முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் சற்று முன்னர் வெளியேறினார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஏர்பஸ் கொள்வனவு தொடர்பான குற்றச்சாட்டு குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ இன்று (12) காலை CIABOC முன்பாக ஆஜரானார்.
2013 இல் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானக் கொள்வனவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 2 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் தொடர்பான குற்றச்சாட்டு குறித்து வாக்குமூலம் வழங்குமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அழைப்பாணை விடுத்திருந்தது.
முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவும் இது தொடர்பாக ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளரான சட்டத்தரணி மனோஜ் கமகே, சில சட்ட விடயங்கள் தொடர்பாக சட்டத்தரணிகள் குழுவொன்றுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.
மறைந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முன்னாள் பிரதான நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன அளித்ததாகக் கூறப்படும் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது என்று மனோஜ் கமகே மேலும் கூறினார். எனினும், அந்த வாக்குமூலம் மிரட்டல் மற்றும் கட்டாயத்தின் பேரில் பெறப்பட்டதாக சந்திரசேன ஏற்கனவே நீதிமன்றத்தில் சத்தியக்கடதாசி சமர்ப்பித்திருந்ததாக அவர் வாதிட்டார். வெறும் அதன் அடிப்படையில் அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தால் அது சட்டவிரோதமானது என்று அவர் வலியுறுத்தினார்.
