உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் குறித்து நடுநிலையான விசாரணையை உறுதி செய்வதற்காக, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அருண ஜயசேகரவை அந்தப் பதவியிலிருந்து நீக்குமாறு வணக்கத்திற்குரிய தந்தை ரோஹன் சில்வா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே தந்தை சில்வா இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
சமூகம் மற்றும் சமயத்திற்கான நிலையத்தினால் (CSR) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த “நினைவு, வலி மற்றும் நம்பிக்கை: ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு நீதியைத் தேடி” (Memory, Pain and Hope: Seeking Justice Seven Years On) என்ற தலைப்பிலான சிறப்பு அறிக்கை வெளியிடப்பட்டது.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய தந்தை ரோஹன் சில்வா,
“தாக்குதல்கள் குறித்த விசாரணைகள் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு சாதகமான திசையில் முன்னெடுத்துச் செல்லப்படுவது போல் தோன்றினாலும், சர்ச்சைக்குரிய சாய்ந்தமருது சம்பவங்களின் போது கிழக்கு மாகாண கட்டளைத் தளபதியாகப் பணியாற்றிய தற்போதைய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அருண ஜயசேகர, விசாரணைகள் முடியும் வரை பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். நியாயமான மற்றும் நடுநிலையான விசாரணைக்குத் தேவையான நிலைமைகளை உறுதி செய்வதற்காகவே இந்தக் கோரிக்கையை விடுக்கிறோம்,” என்றார்.
