Headlines

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் திட்டங்களை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மீளாய்வு செய்தார்.

டிட்வா’ (Ditwah) சூறாவளி காரணமாக பெற்றோரை இழந்த சிறுவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு, தகுதியுடைய சிறுவர்களுக்கு எவ்வித தாமதமுமின்றி வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றங்களை மீளாய்வு செய்யவும், 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை பரிசீலிக்கவும் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (21) முற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இலங்கை மகளிர் பணியகம், மகளிர் பற்றிய தேசியக் குழு, முன்பள்ளி அபிவிருத்திக்கான தேசிய செயலகம், நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புச் சேவைகள் திணைக்களம் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை உள்ளிட்ட அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் 2026ஆம் ஆண்டுக்கான மீண்டெழும் மற்றும் மூலதனச் செலவினங்களின் முன்னேற்றம் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போஷாக்கு உணவு கொடுப்பனவு, முன்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ‘குரு அபிமானி’ கொடுப்பனவுத் திட்டம் உள்ளிட்ட அமைச்சின் முக்கிய வேலைத்திட்டங்களின் முன்னேற்றங்களையும் ஜனாதிபதி மீளாய்வு செய்தார்.

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போஷாக்கு உணவு கொடுப்பனவுத் திட்டம் என்பது வெறுமனே மற்றொரு பணப் பரிமாற்றத் திட்டமாக மாறக்கூடாது என்றும், தாய்மார்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்துதல் என்ற அதன் நோக்கம் அடையப்படுவதை உறுதி செய்ய முறையான கண்காணிப்பின் கீழ் அது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

‘டிட்வா’ சூறாவளியினால் பெற்றோரை இழந்த சிறுவர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு வழங்கும் திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது. தகுதியுடைய சிறுவர்களுக்கு அந்தக் கொடுப்பனவு தாமதமின்றி வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.

சமூகத்தில் பாதிக்கப்படக்கூடிய சிறுவர்களைக் கண்டறிந்து, அவர்கள் அத்தகைய சூழ்நிலைகளில் இருந்து தப்பிப்பதற்கு உதவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் அமலாக்கம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

துல்லியமான தரவு அமைப்பைப் பேணுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, 2027 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் அத்தகைய தரவுத்தளத்தின் அடிப்படையிலேயே அமையும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *