கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) கைது செய்யப்பட்ட 22 பிக்குகள் சம்பந்தப்பட்ட பாரிய போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையின் பின்னணியில் ஒரு தொழிலதிபர் சூத்திரதாரியாகச் செயற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி தாய்லாந்தில் இருந்து வருகை தந்த சந்தேகநபர்கள், “குஷ்” கஞ்சா மற்றும் “ஹாஷ்” உட்பட சுமார் 112 கிலோகிராம் போதைப்பொருட்களைக் கைவசம் வைத்திருந்தபோதே கைது செய்யப்பட்டனர். கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த மதிப்பு 1.1 பில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் இவ்வளவு அதிக அளவிலான சட்டவிரோதப் பொருட்களுடன் பிக்குகள் கைது செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என நம்பப்படுகிறது.
மகாநாயக்க தேரர்களின் எழுத்துப்பூர்வ அனுமதியைப் பெறாமல் இந்த பிக்குகள் வெளிநாடு சென்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அத்தகைய அனுமதியைக் கட்டாயமாக்கும் விதிமுறையை மீண்டும் அமல்படுத்துமாறு பௌத்த மதகுருமார் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த பௌத்த விவகார திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் காமினி செனரத்ன, அனுமதி வழங்கும் செயல்முறை தற்காலிகமாகவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது என்றார். அந்த முறையை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு மகாநாயக்க தேரர்கள் விடுத்த கோரிக்கை ஏற்கனவே வெளிவிவகார அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சந்தேகநபர்கள் ஏப்ரல் 26ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். அங்கு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் (PNB) மேலதிக விசாரணைக்காக அவர்களை ஏழு நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்தது.
விசாரணையின் போது, தங்களது பயணம் மற்றும் தங்குமிட ஏற்பாடுகள் அனுசரணையாளர்களால் செய்யப்பட்டதாகவும், பாடசாலை உபகரணங்கள் இருப்பதாகக் கூறப்பட்ட சாமான்களைக் (Luggage) கொண்டு செல்லுமாறு தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் பிக்குகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்களின் கைத்தொலைபேசிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர், மேலும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) இந்த போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு பற்றிய மேலதிக விவரங்களைக் கண்டறிய அவற்றை பகுப்பாய்வு செய்து வருகிறது.
இதற்கிடையில், இந்த நடவடிக்கையை ஒருங்கிணைத்ததாக நம்பப்படும் பிரதான பிக்கு கம்பஹாவில் கைது செய்யப்பட்டார். அவர் விசாரணைகளுக்கு ஒத்துழைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த குழுவினர் இன்று (28) சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அதேவேளை, கைது செய்யப்பட்டவர்களில் தங்களது பகுதியைச் சேர்ந்த பிக்கு ஒருவரும் அடங்குவதைக் கண்டித்து இந்துருவை பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
