2026 ஐபிஎல் தொடரின் பரபரப்பான கட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் ஒரு மாஸ் தகவல் வெளியாகியுள்ளது. காயம் காரணமாக இந்த சீசனின் ஆரம்பப் போட்டிகளைத் தவறவிட்ட ‘தல’ தோனி, தனது பழைய வேட்டைக்களமான மும்பை வான்கடே மைதானத்தில் களம் காணத் தயாராகிவிட்டார்.
வான்கடேவில் ‘தல’ தரிசனம்! தசைநார் காயம் காரணமாக கடந்த 5 போட்டிகளாகப் பார்வையாளராக மட்டுமே இருந்த தோனி, ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ‘எல் கிளாசிகோ’ மோதலில் பங்கேற்பது தற்போது உறுதியாகியுள்ளது. பரம எதிரிகளான மும்பை மற்றும் சென்னை அணிகள் மோதும் இந்தப் போட்டி, தோனியின் வருகையால் இப்போது உலகமே உற்றுநோக்கும் ஒரு களமாக மாறியுள்ளது.
சஞ்சு – தோனி மெகா காம்போ! தோனி இல்லாத காலத்தில் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங்கில் அதிரடி காட்டிய சஞ்சு சாம்சன் (185 ரன்கள்), தற்போது தோனியுடன் இணையவுள்ளார். 2026 டி20 உலகக்கோப்பையின் நாயகன் சஞ்சுவும், அனுபவ சிங்கம் தோனியும் ஒரே அணியில் இணைந்து ஆடுவதைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். தோனி திரும்பும் பட்சத்தில், கீப்பிங் பொறுப்பை அவர் ஏற்க, சஞ்சு சாம்சன் ஒரு ஸ்பெஷலிஸ்ட் பேட்டராக விஸ்வரூபம் எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பையை மிரட்டும் புள்ளிவிபரங்கள்: மும்பை அணிக்கு எதிராக 44 போட்டிகளில் 772 ரன்களைக் குவித்துள்ள தோனி, வான்கடே மைதானத்தில் எப்போதுமே ஒரு அச்சுறுத்தலான வீரராகவே பார்க்கப்படுகிறார். 35.09 சராசரியுடன் மும்பையை வதைக்கும் தோனியின் வருகை, அந்த அணிக்கு நிச்சயம் ஒரு மனரீதியான அழுத்தத்தைக் கொடுக்கும்.
