Headlines

“சினிமா ஒன்றும் ஓட்டப்பந்தயம் அல்ல…” – திரைப்பயணம் குறித்து மனம் திறந்த சமந்தா!

சென்னை: தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான சமந்தா, தனது கடின உழைப்பால் பல ஏற்ற இறக்கங்களைக் கடந்து இன்றும் ரசிகர்களின் ‘ஃபேவரிட் குயினாக’ வலம் வருகிறார். தற்போது அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘மா இண்டி பங்காரம்’ (Ma Inti Bangaram) என்ற தெலுங்குத் திரைப்படம், தமிழில் ‘எங்கள் தங்கம்’ என்ற பெயரில் வரும் ஜூன் 19-ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.

அண்மையில் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்ற சமந்தா, சினிமாத் துறை மற்றும் தனது நீண்ட திரைப்பயணம் குறித்துத் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

பந்தயம் என்று நினைத்து ஓடினேன்:

தனது ஆரம்பக்காலக் கருத்து குறித்துப் பேசிய சமந்தா, “முன்பெல்லாம் சினிமா என்பது ஒரு ஓட்டப்பந்தயப் போட்டி என்றுதான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். அதில் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்க வேண்டும், எப்படியாவது வெற்றிக் கோட்டைத் தொட்டுவிட வேண்டும் என்றுதான் எப்போதும் நினைப்பேன்; அதற்காக ஓடினேன்” என்றார்.

தாமதமாகப் புரிந்த உண்மை:

ஆனால், அனுபவமும் முதிர்ச்சியும் தனக்கு வேறு ஒரு உண்மையைக் கற்பித்ததாக அவர் கூறினார். “உண்மையில், இங்கே அப்படி ஒரு பந்தயமே கிடையாது. நாம் ஓடிச் சென்று பிடிக்க வேண்டிய எல்லைக்கோடு என்பதே இங்கு இல்லை என்பதை மிகத் தாமதமாகத்தான் நான் புரிந்து கொண்டேன்,” என்று சமந்தா மனம் திறந்து பேசினார்.

சமந்தாவின் சொந்தத் தயாரிப்பில் ‘எங்கள் தங்கம்’:

‘எங்கள் தங்கம்’ திரைப்படம் சமந்தாவுக்கு மிகவும் ஸ்பெஷலான ஒன்றாகும். ஏனெனில், இத்திரைப்படத்தைச் சமந்தா தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார்.

‘தி ஃபேமிலி மேன்’ தொடர் புகழ் ராஜ் மற்றும் டி.கே கதையை உருவாக்கியுள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சமந்தாவுடன் இணைந்து ஸ்ரீமுகி, கௌதமி, ஆனந்த் லட்சுமி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

திரையுலகில் நிலவும் கடுமையான போட்டி, ‘நம்பர் 1’ இடத்திற்கான ஓட்டம் ஆகியவற்றைத் தாண்டி, தனக்குப் பிடித்தமான நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதும், அதில் ஆத்மதிருப்தி அடைவதுமே முக்கியம் என்பதைச் சமந்தா தனது பேச்சின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *