ஜெனிவாவிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி, தூதுவர் சுமித் தசநாயக்க, திருத்தந்தை 14 ஆம் லியோ பாப்பரசரிடம் தனது விசுவாசப் பத்திரத்தைச் சமர்ப்பித்துள்ளார்.
வத்திக்கான் நகரில் உள்ள அப்போஸ்தலிக் அரண்மனையில் நடைபெற்ற உத்தியோகபூர்வ நிகழ்வின் போது, ஜெனிவாவைத் தளமாகக் கொண்ட வத்திக்கானுக்கான (Holy See) இலங்கையின் அடுத்த தூதுவராக அவர் நியமிக்கப்பட்டார்.
கடந்த மே 21 ஆம் தேதி நடைபெற்ற இந்த நிகழ்வின் போது உரையாற்றிய திருத்தந்தை 14 ஆம் லியோ பாப்பரசர், “ஆயுதங்கள் மூலம் அமைதியை நாடும் இக்காலத்தில், பேச்சுவார்த்தைகளை ஊக்குவிக்கும் மற்றும் அனைத்து மட்டங்களிலும் ஒருமித்த கருத்தை நாடும் இராஜதந்திரத்திற்குத் திரும்ப வேண்டிய அவசரத் தேவை உள்ளது: இருதரப்பு, பிராந்திய மற்றும் பலதரப்பு” என்று குறிப்பிட்டார்.
தூதுவர்களின் சேவை என்பது அந்தந்த நாடுகளுக்கும் வத்திக்கானுக்கும் இடையே நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பின் முக்கிய பாலமாக அமைகிறது என்றும் பாப்பரசர் வலியுறுத்தினார். மேலும், “நமது சமூகங்களின் விளிம்புகளில் உள்ள, பெரும்பாலும் மறக்கப்பட்டவர்கள் மீது கவனத்தை ஈர்க்க நமது கூட்டு முயற்சிகள் பங்களிக்கும். இதன் மூலம், மிகவும் நீதியான, சகோதரத்துவ மற்றும் அமைதியான உலகிற்கு வலுவான அடித்தளங்களை இட நாம் இணைந்து செயல்பட முடியும்,” என்றார்.
தூதுவர் சுமித் தசநாயக்க, ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் வாழ்த்துக்களை பாப்பரசரிடம் தெரிவித்ததுடன், இலங்கைக்காகவும் அதன் மக்களுக்காகவும் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
இலங்கைக்கும் வத்திக்கானுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை நினைவு கூர்ந்த தூதுவர், 2027 ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க விடுத்த அழைப்பை பாப்பரசர் 14 ஆம் லியோவிடம் மீண்டும் வலியுறுத்தினார்.
விசுவாசப் பத்திரச் சமர்ப்பிப்பு நிகழ்வின் ஒரு பகுதியாக, தூதுவர் சுமித் தசநாயக்க, வத்திக்கான் இராஜாங்கச் செயலாளர் கர்தினால் பியெட்ரோ பரோலினைச் சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடினார்.
மேலும், தூதுவர் தசநாயக்க, நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான செயலாளர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகரையும் சந்தித்தார். பேராயர் கல்லாகர் நவம்பர் 2025 இல் இலங்கைக்கும் வத்திக்கானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டதன் 50 வது ஆண்டு விழாவைக் கொண்டாடுவதற்காக இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பேராயர் கல்லாகர் தனது இலங்கை விஜயத்தையும், அங்கு தமக்கு அளிக்கப்பட்ட சிறப்பான வரவேற்பையும் இதன்போது நினைவு கூர்ந்தார்.
தூதுவர் சுமித் தசநாயக்கவுடன், சியரா லியோன், பங்களாதேஷ், ஏமன், ருவாண்டா, நமீபியா, மொரிஷியஸ் மற்றும் சாட் ஆகிய நாடுகளின் வதிவிடமற்ற தூதுவர்களும் பாப்பரசர் 14 ஆம் லியோவிடம் தங்களது விசுவாசப் பத்திரங்களைச் சமர்ப்பித்தனர்.
