கொழும்பு
இலங்கையின் விவசாய மற்றும் பெருந்தோட்டத்துறைகளில் (Plantation and Agriculture Sectors) மேற்கொள்ளப்படும் முதலீடுகள் நாட்டின் பொருளாதார மீட்சிக்கும், கிராமப்புற வாழ்வாதார மேம்பாட்டிற்கும் மிக முக்கிய பங்காற்றி வருகின்றன. இந்நிலையில், இத்துறை சார்ந்த சில முதலீட்டு நிறுவனங்கள் குறித்து அண்மைக் காலங்களாக சமூக வலைத்தளங்கள் மற்றும் தனிப்பட்ட உரையாடல்களில் பரவி வரும் பல்வேறு தகவல்கள், முதலீட்டாளர்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன. இது குறித்து, M. முத்துக்குமார் கவலை வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய முத்துக்குமார், இத்துறை எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் சட்டபூர்வமான நிறுவனங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து விரிவாகப் பேசினார்.
வதந்திகளால் ஏற்படும் குழப்பம்:
சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் ஆதாரமற்ற தகவல்கள் மற்றும் தேவையற்ற விமர்சனங்கள் காரணமாக, நீண்டகாலமாக இத்துறையில் முதலீடு செய்துள்ள பொதுமக்களும், புதிய முதலீட்டாளர்களும் பெரும் குழப்பத்திற்குள்ளாகியுள்ளனர் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இத்தகைய வதந்திகள், நன்கு திட்டமிட்டு இயங்கி வரும் நிறுவனங்களின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதுடன், நாட்டின் முதலீட்டுச் சூழலையும் சீர்குலைக்கும் அபாயம் கொண்டவை என்று அவர் எச்சரித்தார்.
சட்டபூர்வ நிறுவனங்களின் பங்களிப்பு:
இலங்கையில் விவசாய மற்றும் பெருந்தோட்டத்துறையில் ஈடுபட்டுள்ள பெரும்பாலான நிறுவனங்கள், கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அரசாங்கத்தின் சட்டதிட்டங்களுக்கு அமைய முறையாகப் பதிவு செய்யப்பட்டு, வெளிப்படைத் தன்மையுடன் இயங்கி வருகின்றன என்பதை M.முத்துக்குமார் தனது உரையில் வலியுறுத்தினார். இத்தகைய நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்கள் நம்பி முதலீடு செய்துள்ளனர்.
இந்த முதலீடுகள் மூலம் பல்லாயிரக்கணக்கானோருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு, அவர்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், நாட்டின் தேசிய உற்பத்திக்கும், ஏற்றுமதி வருமானத்திற்கும் இவை குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகின்றன என்பதையும் அவர் ஆதாரங்களுடன் எடுத்துரைத்தார்.
சட்டவிரோத நிறுவனங்களுக்கு எதிரான கடும் நிலைப்பாடு:
மோசடி நிறுவனங்கள் குறித்த தனது நிலைப்பாட்டைத் தெளிவாக அறிவித்த M.முத்துக்குமார், சட்டவிரோதமாக இயங்கி, தவறான வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றும் நிறுவனங்கள் இருந்தால், அவற்றை உடனடியாக அடையாளங்காண வேண்டும் என்று வலியுறுத்தினார்.
“அத்தகைய மோசடி நிறுவனங்களைப் பொதுமக்களுக்கு வெளிப்படுத்தி, அவர்களுக்கு எதிராக மிகக் கடுமையான சட்டநடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசாங்கத்திற்கும், பாதுகாப்புத் துறையினருக்கும் நாம் முழுமையான ஆதரவை வழங்குவோம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. முதலீட்டாளர்களின் பணம் பாதுகாக்கப்பட வேண்டும்,” என்று அவர் உறுதியாகத் தெரிவித்தார்.
அதேவேளை, ஒரு சில மோசடி நிறுவனங்களைக் காரணமாக வைத்து, சட்டப்படி பதிவு செய்யப்பட்டு, வெளிப்படையாக இயங்கி வரும் அனைத்து நிறுவனங்களையும் பொதுவாக சந்தேகத்திற்குள்ளாக்கும் வகையிலான கருத்துக்கள் வெளியிடப்பட கூடாது என்று அவர் கேட்டுக்கொண்டார்.
“சட்டபூர்வமாக இயங்கும் நிறுவனங்களை ஊக்கப்படுத்துவதன் மூலமே, நாம் விவசாயத்துறையில் நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்தி, உற்பத்தியைப் பெருக்கி, நாட்டைப் பொருளாதார ரீதியாகப் பலப்படுத்த முடியும். தேவையற்ற அச்சத்தைப் பரப்புவது, இந்த வளர்ச்சிப் பயணத்தைத் தடுத்து நிறுத்திவிடும்,” என்று M,முத்துக்குமார் மேலும் தெரிவித்தார்.
விவசாய முதலீடுகள் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், முதலீட்டாளர்கள் விழிப்புடன் இருப்பது அவசியம் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அதேசமயம், சட்டபூர்வமான நிறுவனங்களுக்குத் தேவையான பாதுகாப்பையும், ஊக்கத்தையும் வழங்குவது அரசாங்கத்தின் மற்றும் சமூகத்தின் பொறுப்பாகும் என்பது இந்த ஊடக சந்திப்பின் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
