Headlines

2016 பிணைமுறி விவகாரம்: மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்துச் செய்தது உயர் நீதிமன்றம்!

2016ஆம் ஆண்டு இடம்பெற்ற பிணைமுறி விநியோக விவகாரம் தொடர்பான வழக்கில், பல பிரதிவாதிகளுக்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளைத் தொடரத் தடையாக இருந்த கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாமின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் இன்று (01) ரத்துச் செய்துள்ளது.

2016 மார்ச் மாதத்தில் இலங்கை மத்திய வங்கியால் நடத்தப்பட்ட பிணைமுறி விநியோகத்தின் போது அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில், பேர்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனம் (Perpetual Treasuries Ltd.), மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பலருக்கு எதிராக சட்டமா அதிபரால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டை விசாரித்த பின்னரே உயர் நீதிமன்றம் இந்த முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.

நீதியரசர் மகிந்த சமயவர்தனவினால் வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்புக்கு, பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன மற்றும் நீதியரசர்களான ஷிரான் குணரத்ன, அசல வெங்கப்புலி, அர்ஜுன ஒபயசேகர ஆகியோர் தமது இணக்கத்தைத் தெரிவித்துள்ளனர்.

உயர் நீதிமன்றம் மேல் நீதிமன்றத்தின் உத்தரவை தற்போது ரத்துச் செய்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளை இனி தடையின்றித் தொடர முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *