Headlines

2026 ஆசிய விளையாட்டில் இலங்கைக்கு முதல் தங்கம்! இந்திய வீரர்களை வீழ்த்தி ருமேஷ் பத்திரகே சாதனை.

ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கை நட்சத்திர வீரர் ருமேஷ் தரங்க பத்திரகே தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

நாகோயா சிட்டி மிசுஹோ பார்க் தடகள மைதானத்தில் (Nagoya City Mizuho Park Athletic Stadium) நடைபெற்ற இப்போட்டியில், ருமேஷ் பத்திரகே தனது மூன்றாவது முயற்சியில் 88.33 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து முன்னிலை பெற்றார். தொடர்ந்து தனது ஆதிக்கத்தைச் செலுத்திய அவர், இறுதி முயற்சியில் 88.55 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து தனது முந்தைய தூரத்தை முறியடித்து தங்கப் பதக்கத்தை உறுதி செய்தார்.

இப்போட்டியில் இந்தியாவின் யஷ்வீர் சிங் 84.72 மீற்றர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தையும், சக நாட்டு வீரரான ரோஹித் யாதவ் 84.35 மீற்றர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

இதேவேளை, இப்போட்டியில் கலந்துகொண்ட மற்றுமொரு இலங்கை வீரரான சுமேத ரணசிங்க 78.08 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து ஆறாவது இடத்தைப் பிடித்தார்.

ருமேஷ் பத்திரகேயின் இந்த வெற்றி, 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை வென்ற முதல் தங்கப் பதக்கமாகும். இதற்கு முன்னர், பெண்களுக்கான கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *