ஈரானுடனான போர்நிறுத்தம் முடிவடைய சில மணிநேரங்களே இருந்த நிலையில், அதனை காலவரையின்றி நீடிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை (ஏப். 21) தெரிவித்தார். ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொண்டு, உலகப் பொருளாதாரத்தை உலுக்கியுள்ள போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தைகளை இரு நாடுகளும் தொடர அனுமதிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக புதிய வன்முறை அச்சுறுத்தல்களை விடுத்து வந்த ட்ரம்ப், பின்னர் தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கினார். ஏழு வாரங்களாக நடந்து வரும் இந்தப் போரில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் வகிக்கும் பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்று, ஈரானின் “தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் ஒரு ஒருங்கிணைந்த முன்மொழிவை கொண்டு வரும் வரை” போர்நிறுத்தத்தை நீட்டிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக ட்ரம்ப் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“ஈரான் அரசாங்கம் கடுமையாக பிளவுபட்டுள்ளது, இது எதிர்பார்க்காத ஒன்று அல்ல” என்பதால் போர்நிறுத்தத்தை நீட்டிக்க முடிவு செய்ததாக ட்ரம்ப் கூறினார். இது அமெரிக்க-இஸ்ரேல் கூட்டு நடவடிக்கைகளால் ஈரானின் சில தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் குறிக்கிறது. இதில் மறைந்த உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனியும் அடங்குவார், அவருக்குப் பிறகு அவரது மகன் பதவியேற்றுள்ளார்.
அதே சமயம், ஈரானின் துறைமுகங்கள் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் அமெரிக்க கடற்படையின் முற்றுகை தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதனை தெஹ்ரான் ஒரு போர் நடவடிக்கை என்று அழைத்துள்ளது.
ட்ரம்பின் இந்த அறிவிப்பு தன்னிச்சையான ஒன்றாகத் தோன்றியது. இரண்டு வாரங்களுக்கு முன்பு தொடங்கிய இந்த போர்நிறுத்தத்தை நீட்டிக்க ஈரானோ அல்லது இஸ்ரேலோ ஒப்புக்கொள்ளுமா என்பது உடனடியாகத் தெரியவில்லை.
ஈரானிய அதிகாரிகளுடன் இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைக்காக துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் பாகிஸ்தானுக்கு மேற்கொள்ளவிருந்த பயணம் நிறுத்தி வைக்கப்பட்டதாக வந்த தகவல்களுக்குப் பிறகும், தெஹ்ரானின் பேச்சுவார்த்தையாளர்கள் பாகிஸ்தானில் உள்ள இடைத்தரகர் மூலம் தங்கள் அமெரிக்க சகாக்களிடம் இனி பேச்சுவார்த்தைக்கு வரப்போவதில்லை என்று தெரிவித்ததாக ஈரானிய அரசு செய்தி நிறுவனமான தஸ்னிம் செய்தி வெளியிட்ட பிறகும் ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
“இந்த சூழ்நிலையில், பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்வது நேரத்தை வீணடிப்பதாகும், ஏனெனில் அமெரிக்கா எந்தவொரு பொருத்தமான உடன்பாட்டையும் எட்டுவதைத் தடுக்கிறது,” என்று தஸ்னிம் செய்தி வெளியிட்டுள்ளது.
ட்ரம்ப் போர்நிறுத்தத்தை நீட்டித்தது, திடீர் தாக்குதலுக்கு “நேரத்தை வாங்கும் ஒரு தந்திரம்” என்று ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப்பின் ஆலோசகர் கூறியதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
காலிபாஃப்பின் ஆலோசகர் எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்ட பதிவில், அமெரிக்க கடற்படையால் ஈரானிய துறைமுகங்கள் தொடர்ந்து முற்றுகையிடப்படுவது “குண்டுவீச்சிலிருந்து வேறுபட்டதல்ல, இதற்கு ராணுவ ரீதியாக பதிலடி கொடுக்கப்பட வேண்டும்” என்று கூறியதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
முன்னதாக செவ்வாய்க்கிழமை, CNBC-ன் “ஸ்குவாக் பாக்ஸ்” (Squawk Box) உடனான பேட்டியின் போது, அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒரு உடன்பாட்டை எட்ட போர்நிறுத்தத்தை நீட்டிப்பீர்களா என்று கேட்கப்பட்டதற்கு, “நான் அதைச் செய்ய விரும்பவில்லை” என்று ட்ரம்ப் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரம்ப்பிற்கு பாகிஸ்தான் பிரதமர் நன்றி
“தற்போது நடந்து வரும் ராஜதந்திர முயற்சிகள் தொடர, போர்நிறுத்தத்தை நீட்டிக்க வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை தயவுடன் ஏற்றுக்கொண்டதற்காக” பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் ட்ரம்ப்பிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
“இரு தரப்பினரும் போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து கடைப்பிடிப்பார்கள் என்றும், மோதலுக்கு நிரந்தர முடிவுகட்ட இஸ்லாமாபாத்தில் திட்டமிடப்பட்டுள்ள இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையின் போது விரிவான ‘அமைதி உடன்பாட்டை’ எட்ட முடியும் என்றும் நான் மனதார நம்புகிறேன்,” என்று ஷெரீப் சமூக ஊடகத்தில் எழுதியுள்ளார்.
அந்த இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை எப்போது திட்டமிடப்படும் அல்லது திட்டமிடப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
