Headlines

பாகுபாடற்ற கல்விச் சூழலை உருவாக்குவதே அரசின் முன்னுரிமை – பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

எந்தவித பாகுபாடும் இன்றி, அனைத்துக் குழந்தைகளுக்கும் நவீன உலகின் வாய்ப்புகளை அணுகவும், அவர்களின் கனவுகளை நம்பிக்கையுடன் பின்தொடரவும் ஏற்ற சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் முன்னுரிமை என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும், பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

குருநாகல் மாவட்டத்திற்கான கல்வி ஆய்வுப் பயணத்தின் ஒரு பகுதியாக, இன்று (18) குருநாகல் புனித பெர்னடெட் மாதிரி பாடசாலையில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டிற்கான வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

பிரதமரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டில் பல்வேறு பாடங்களிலும் தரங்களிலும் சிறந்த சாதனைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு பிரதமரால் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், இச்சந்தர்ப்பத்தில் புனித பெர்னடெட் மாதிரி பாடசாலையின் உத்தியோகபூர்வ பாடசாலைப் பத்திரிகையான “ஆதர்ஷ பிரபா” (Adarsha Prabha) வெளியிட்டு வைக்கப்பட்டது.

அங்கு உரையாற்றிய பிரதமர் மேலும் கூறியதாவது:

“இதுபோன்ற பாடசாலைகளுக்கு விஜயம் செய்து, உங்களைப் போன்ற குழந்தைகளையும் ஆசிரியர்களையும் சந்திக்கும் போது, நம் நாட்டின் கல்வியை மிக உயர்ந்த தரத்திற்கு உயர்த்துவதற்கான எமது உறுதிப்பாடு வலுப்பெறுகிறது. குழந்தைகளின் முகங்கள் மகிழ்ச்சியைப் பிரதிபலிக்கும் மற்றும் அவர்கள் அன்பு மற்றும் கவனிப்பு நிறைந்த சூழலில் வளர்க்கப்படும் பாடசாலைகளை நாங்கள் காண விரும்புகிறோம்.

“ஒரு நாடு என்ற ரீதியில் நாம் பல சவால்களை எதிர்கொண்டுள்ளோம். நீண்ட காலப் பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகு, நாம் இப்போது படிப்படியாக ஸ்திரத்தன்மையை மீட்டெடுத்து வருகிறோம். உலகளாவிய மற்றும் காலநிலை தொடர்பான சவால்களும் ஒரு நாடாக எங்களைப் பாதிக்கின்றன. நாம் கூட்டாகச் செயற்பட்டால் இச்சவால்களை வெற்றிகொள்ள முடியும்.

“கல்வித் துறையில் மாற்றத்தைக் கொண்டுவரும் நோக்கத்துடன் நாம் எமது திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறோம். இது பாடத்திட்ட மேம்பாட்டிற்கு அப்பாற்பட்டு, கல்வித் துறைக்குள் மனித வளங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பரந்த அளவிலான முன்முயற்சிகளை உள்ளடக்கியது, அதன் மூலம் குழந்தைகள் புதிய உலகில் செழித்து வளர்வதற்கான பாதைகளை உருவாக்குகிறது. நவீன உலகின் வாய்ப்புகள் தங்களுக்குத் திறந்திருப்பதை ஒவ்வொரு குழந்தையும் உணருவதையும், அவர்களின் அபிலாஷைகளை பின்தொடரத் தேவையான தன்னம்பிக்கையைக் கொண்டிருப்பதையும் நாம் உறுதி செய்ய வேண்டும்.

“கல்வித் துறையில் பல புதிய சீர்திருத்தங்களுடன் நாம் முன்னோக்கிச் செல்கிறோம். டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் புதிய பாடங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் கல்வியை எளிதாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், ஆசிரியர் பயிற்சி செயல்முறைகளை வலுப்படுத்துவதன் மூலம் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்க நாங்கள் இலக்கு வைத்துள்ளோம்.”

நிகழ்வைத் தொடர்ந்து, குருநாகல் புனித பெர்னடெட் மாதிரி ஆரம்பப் பாடசாலைக்கு பிரதமர் ஆய்வு விஜயத்தை மேற்கொண்டார்.

பிரதமர் மஹவ, ரிடிபெண்டியல்ல கஜனேகம மகா வித்தியாலயத்திற்கும் விஜயம் செய்து, பாடசாலையின் கல்விச் சமூகத்துடன் கலந்துரையாடினார். சவாலான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் அப்பகுதி குழந்தைகளுக்கு கல்வியை வழங்க அர்ப்பணிப்புடன் செயற்படும் ஆசிரியர்களுக்கு பிரதமர் இதன்போது தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

இச்சந்தர்ப்பத்தில் வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ வர்ணசூரிய, விவசாய மற்றும் கால்நடை அபிவிருத்தி பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான அசோக குணசேகர மற்றும் கீதா ஹேரத், குருநாகல் பிரதேச சபையின் தலைவர் எம்.ஏ.விமலசிரி, மஹவ பிரதேச சபையின் தலைவர் சுமேத குமார, வடமேல் மாகாண அமைச்சின் தலைமைச் செயலாளர் சந்தன வன்னினாயக்க, ஏனைய அரச அதிகாரிகள் மற்றும் வடமேல் மாகாண கல்விப் பணிப்பகப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *