அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் நாடாளுமன்ற நடவடிக்கைகளின் தொடக்கமாக, 2027 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (Appropriation Bill) இன்று (07) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே, ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் முதல் வாசிப்பை இன்று சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் மற்றும் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு எதிர்வரும் நவம்பர் 12 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதன்போது, நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் வரவு செலவுத் திட்ட உரை நிகழ்த்தப்படும்.
விவாதங்களுக்கான அட்டவணை விபரம்:
- இரண்டாவது வாசிப்பு விவாதம்: நவம்பர் 13 முதல் 20 வரை ஏழு நாட்களுக்கு நடைபெறும். நவம்பர் 20 மாலை 6 மணிக்கு இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடைபெறும்.
- குழு நிலை விவாதம்: இரண்டாவது வாசிப்பைத் தொடர்ந்து, ஒவ்வொரு அமைச்சுகளுக்குமான செலவினத் தலைப்புகள் ஆராயப்படும் குழு நிலை விவாதம் இடம்பெறும். இது நவம்பர் 21 முதல் டிசம்பர் 14 வரை 19 நாட்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
- இறுதி வாக்கெடுப்பு: டிசம்பர் 14 ஆம் திகதி மாலை 6 மணிக்கு வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான இறுதி வாக்கெடுப்புடன், நாடாளுமன்ற வரவு செலவுத் திட்ட நடவடிக்கைகள் முடிவுக்கு வரும்.
சனி உட்பட ஒதுக்கப்பட்ட ஒவ்வொரு பட்ஜெட் விவாத நாளிலும் காலை 9.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடும். எனினும், ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்கள் இதில் தவிர்க்கப்படும்.
நேர ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை, இரண்டாவது வாசிப்பு விவாதத்தின் போது, விவாத நேரத்தின் 60% ஆளுங்கட்சிக்கும், 40% எதிர்க்கட்சிக்கும் ஒதுக்கப்படும். குழு நிலை விவாதத்திற்கு இந்த ஒதுக்கீடு மாற்றப்பட்டு, 40% ஆளுங்கட்சிக்கும் 60% எதிர்க்கட்சிக்கும் வழங்கப்படும்.
ஒரு குறிப்பிட்ட அமைச்சு தொடர்பான செலவினத் தலைப்பிற்கு வாக்கெடுப்பு கோரப்பட்டால், அன்றைய நாடாளுமன்ற நடவடிக்கைகளின் முடிவில் மாலை 6 மணிக்கு அந்த வாக்கெடுப்பு நடத்தப்படும் என நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் மேலதிகமாகத் தெரிவித்துள்ளது.
