Headlines

அனோஜன் சிவரசாவின் மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி இலங்கை தூதுக்குழு சவூதி அரேபியா பயணம்!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் சிவரசாவின் தண்டனையை ரத்து செய்வது குறித்து கலந்துரையாடுவதற்காக, இரு ஜனாதிபதி சட்டத்தரணிகள் உட்பட நான்கு பேர் கொண்ட தூதுக்குழுவொன்று திங்கட்கிழமை (5) சவூதி அரேபியா செல்லவுள்ளது.

ஜனாதிபதி சட்டத்தரணிகளான உபுல் குமாரப்பெரும மற்றும் பைசர் முஸ்தபா ஆகியோர் இந்தத் தூதுக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவினர் அடுத்த புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை சவூதி அரேபியாவிலுள்ள இரு சட்டத்தரணிகள் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், அனோஜன் சிவரசாவின் விடுதலையை உறுதி செய்யத் தேவையான அரசாங்கத் தலையீட்டை வலியுறுத்தி, ரமண்ய மகா நிகாய மற்றும் அமரபுர மகா நிகாயவின் மகாநாயக்க தேரர்கள் அண்மையில் ஜனாதிபதியிடம் மகஜர் ஒன்றை கையளித்திருந்தனர்.

அவரது தண்டனையை ரத்து செய்யக் கோரும் மேன்முறையீட்டு மனுவொன்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக சவூதி அரேபியாவின் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் இந்த விவகாரத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், இராஜதந்திர ரீதியில் சவூதி அதிகாரிகளுடன் தொடர்ந்து ஒருங்கிணைந்து வருவதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சவூதி அரேபியாவிலுள்ள அல்-அஹ்ஸா குற்றவியல் நீதிமன்றம், அனோஜன் சிவரசா சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கைக்காக அவருக்கு ஆரம்பத்தில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் மூன்று மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதித்திருந்தது.

அனோஜன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டை அடுத்து, அந்தத் தண்டனைக்கு எதிராக நீதிமன்றத்தில் மேலும் ஒரு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது. மேன்முறையீடுகள் பரிசீலிக்கப்பட்ட பின்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

கல்முனை நாற்பிட்டிமுனையைச் சேர்ந்த அனோஜன் சிவரசா, ஒன்பது மாதங்களுக்கு முன்னர் வேலைக்காக சவூதி அரேபியா சென்றிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *