மதுரை: உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா, நீண்ட 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கோலாகலமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற இந்தச் சிகர நிகழ்வில், கோபுரங்கள் மற்றும் விமானங்களுக்குப் புனித நீர் ஊற்றப்பட்டது. மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டு, மின்னொளி அலங்காரத்தில் ஜொலிக்கிறது.
ரூ.25 கோடியில் திருப்பணிகள்:
இந்தக் குடமுழுக்கு விழாவிற்காகக் கடந்த பல மாதங்களாக ரூ.25 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. குறிப்பாகத் தீ விபத்தில் சேதமடைந்த வீரவசந்தராயர் மண்டபம் புனரமைக்கப்பட்டு, அண்மையில் திறக்கப்பட்டது. மூலவர் மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரருக்காகப் பிரத்யேக தங்க குடங்கள் யாகசாலையில் வைக்கப்பட்டு, 400-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்களால் யாகங்கள் நடத்தப்பட்டன.
வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு:
கடந்த 11-ம் தேதி தொடங்கிய யாகசாலை பூஜைகள் இன்று காலை வரை நீடித்தன. முன்னதாக நேற்று பரிவார தெய்வங்களுக்குக் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இன்று அதிகாலை 3.45 மணிக்கு இறுதி யாக பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, காலை 7.40 மணியளவில் பக்தர்களின் கோஷங்கள் விண்ணதிர, 4 ராஜ கோபுரங்கள் உட்பட 12 கோபுரங்கள் மற்றும் தங்க விமானங்களுக்குப் புனித நீர் ஊற்றப்பட்டது. பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் காலை 8.10 மணிக்கு மூலவர் மீனாட்சி அம்மனுக்கும், 8.50 மணிக்குச் சுந்தரேசுவரருக்கும் மகா கும்பாபிஷேம் நடைபெற்றது.
