Headlines

ரணிலின் பாதுகாப்பு அதிகாரி மீது கமராவால் தாக்குதல்: ஊடகவியலாளர் கைது!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தனது கமராவினால் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், தனியார் ஊடக நிறுவனமொன்றின் ஒளிப்பதிவாளர் (Cameraman) இன்று (01) கொம்பனித்தெரு (Slave Island) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இன்று பொலிஸ் நிலையத்திற்குச் சென்றிருந்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினம் (30) அவருக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு அமைய, தனது சட்டத்தரணியுடன் அவர் பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்திருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றைய தினம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்பான வழக்கு விசாரணை இடம்பெற்றது. இதன்போது நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே வைத்து, அமைச்சரவை பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த (Ministerial Security Division) அதிகாரி மீது குறித்த ஒளிப்பதிவாளர் கமராவால் தாக்கும் காணொளிகள் ஏனைய ஊடகவியலாளர்களால் பதிவு செய்யப்பட்டிருந்தன. இந்தச் சம்பவம் பின்னர் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டிருந்தது.

இந்தத் தாக்குதலுக்கு உள்ளானவர் அமைச்சரவை பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜன்ட் ஏ.எச். மகேஷ் ரஞ்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இத்தாக்குதலில் காயமடைந்த அவர் தற்போது நாராஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *