Headlines

இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார் ஞானசார தேரர்!

பொது பல சேனா (BBS) அமைப்பின் பொதுச் செயலாளர் பூஜ்ய கலபொட அத்தே ஞானசார தேரர் இன்று (05) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

பல நீதிமன்றங்களால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைக்கு அமைய கைது செய்யப்பட்ட ஞானசார தேரரை, இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நேற்று (04) உத்தரவிட்டிருந்தார். நேற்று நீதிமன்ற அறையில் குறித்த பிடியாணை தொடர்பான மோஷன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் (CCD) அதிகாரிகளால் தேரர் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது, மேன்முறையீட்டு நீதிமன்றம், கொழும்பு மேல் நீதிமன்றம் மற்றும் கொழும்பு நீதவான் நீதிமன்றம் ஆகியவற்றால் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.

ஞானசார தேரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளான இரேஷ் செனவிரத்ன மற்றும் பாசான் கருணாரத்ன ஆகியோர், தனது சேவைபெறுநர் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்ததாகவும், அதனாலேயே ஆரண்ய சேனாசனய ஒன்றிற்குச் சென்று அங்கு தங்கியிருந்ததாகவும் மன்றுக்குத் தெரிவித்தனர்.

அத்துடன், 2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழு, ஞானசார தேரருக்கு விசேட பாதுகாப்பு வழங்கப் பரிந்துரைத்திருந்ததை சுட்டிக்காட்டிய சட்டத்தரணி, அவருக்குச் சிறையில் தகுந்த பாதுகாப்பு வழங்க உத்தரவிடுமாறும் கோரினார்.

விடயங்களை ஆராய்ந்த நீதவான், ஞானசார தேரரை இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும், குறித்த பிடியாணை தொடர்பில் எதிர்வரும் புதன்கிழமை கொழும்பு நீதவான் நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், விளக்கமறியலில் உள்ள ஞானசார தேரரின் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதவான் மேலதிக அறிவுறுத்தல்களை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *