எயார்பஸ் (Airbus) விமானக் கொள்வனவு கொடுக்கல் வாங்கல் தொடர்பான மோசடி குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை செப்டம்பர் 30ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாமல் ராஜபக்ஷவின் பிணை மனு மீதான உத்தரவை நீதிமன்றம் இன்று பிறப்பிக்கும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், பிணை மனு தொடர்பான பல விடயங்களை மேலும் தெளிவுபடுத்துமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) பணித்த நீதவான், இது தொடர்பான உரிய தகவல்களை எதிர்வரும் செப்டம்பர் 30ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னரே, நாமல் ராஜபக்ஷவின் பிணை மனு மீதான தீர்ப்பை நீதிமன்றம் வழங்கும் எனவும் நீதவான் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
