முன்னாள் அமைச்சரும் முன்னாள் சபாநாயகருமான சமல் ராஜபக்ஷ சற்று முன்னர் இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையாகியுள்ளார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கான சர்ச்சைக்குரிய எயார்பஸ் விமான கொள்வனவு ஒப்பந்தம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கமைய, வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் இன்று (08) காலை ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இதே எயார்பஸ் விவகாரம் தொடர்பில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ அண்மையில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையிலேயே தற்போது குறித்த விசாரணைகளின் ஒரு பகுதியாக சமல் ராஜபக்ஷவிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
