வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமைகள் காணப்படுவதால், அங்கு மீன்பிடியில் ஈடுபடும் பல நாள் மீன்பிடிப் படகுகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) சிவப்பு நிற எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது.
தெற்கு ஒடிசா மீது நிலைகொண்டிருந்த ஆழ்ந்த தாழமுக்கம் (Deep Depression) வடக்கு-வடமேற்கு திசையாக நகர்ந்து, வலுவிழந்து ஒரு தாழமுக்கமாக மாறியுள்ளது. இது இன்று (25) காலை 5:30 மணியளவில் ஒடிசாவின் நுவாபாடாவுக்கு (Nuapada) அருகில் 20.5°N அட்சரேகை மற்றும் 82.5°E தீர்க்கரேகைக்கு அண்மையில் மையம் கொண்டிருந்தது.
இதன் பின்னர், இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையாக நகர்ந்து, அடுத்த 24 மணித்தியாலங்களில் படிப்படியாக மேலும் வலுவிழக்கக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
“எச்சரிக்கை” (Warning) பிரிவின் கீழ் குறிக்கப்பட்டுள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணிக்கு 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும். பலத்த இடியுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும் என்பதுடன், இப்பகுதிகளில் கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரைபடத்தில் “ஆலோசனை” (Advisory) பிரிவின் கீழ் குறிக்கப்பட்டுள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணிக்கு 55 முதல் 65 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும். அத்துடன் கடல் கொந்தளிப்பாகவோ அல்லது மிகவும் கொந்தளிப்பாகவோ மாறும்.
எனவே, மறுஅறிவித்தல் விடுக்கப்படும் வரை 14°N முதல் 22°N வரையான அட்சரேகை மற்றும் 82°E முதல் 90°E வரையான தீர்க்கரேகைக்கு இடைப்பட்ட கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என கடற்படை மற்றும் மீனவ சமூகங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்தக் கடல் பகுதிகளில் மீன்பிடியில் அல்லது நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள், உடனடியாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பாதிக்கப்பட்ட கடல் பகுதிகளில் செயற்பாடுகளில் ஈடுபடுவோர் மிகவும் அவதானமாக இருக்குமாறும், இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எதிர்காலத்தில் வெளியிடப்படும் வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் அறிக்கைகளைத் தொடர்ந்து கண்காணிக்குமாறும் திணைக்களம் மேலும் அறிவுறுத்தியுள்ளது.
