முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் வணக்கத்துக்குரிய கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு செல்லுபடியற்றது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட மற்றும் பலரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணை செய்த பின்னரே உயர் நீதிமன்றம் இன்று இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில், கடந்த 2018 ஆம் ஆண்டு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் ஞானசார தேரருக்கு ஆறு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அதன்பின்னர், அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அவருக்கு விசேட ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு, அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையிலேயே, ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட குறித்த பொதுமன்னிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், அது சட்டத்திற்கு முரணானது மற்றும் செல்லுபடியற்றது எனவும் உயர் நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
