27 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். விஜய்யின் நடத்தை குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்த இந்த வழக்கு, ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
லண்டனில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் சங்கீதா ஆஜராக, பட்ஜெட் கூட்டத்தொடர் காரணமாக விஜய் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரினார். விசாரணையின் போது, நீதிபதி சங்கீதாவிடம் நீண்ட விசாரணை நடத்தினார். அதன் பின்னர், சங்கீதா தனது விவாகரத்து மனுவைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாகத் தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார்.
கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்த சங்கீதா, திடீரென வழக்கை வாபஸ் பெற்றது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. விஜய்யின் பெற்றோர் அல்லது மகன் ஜேசன் சஞ்சய் நடத்திய சமரச பேச்சுவார்த்தைகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது. பிள்ளைகள் இருவரும் வளர்ந்துவிட்ட நிலையில், சங்கீதா லண்டனில் இருந்து சென்னைக்கு வந்து விஜய்யுடன் மீண்டும் இணைந்து வாழ்வாரா என்பது இனிமேல்தான் தெரியவரும்.
எது எப்படியோ, நீண்ட நாட்களாக நிலவி வந்த இந்த குடும்பப் பிரச்சனை சுமூகமாக முடிவுக்கு வந்துள்ளதும், விவாகரத்து மனு திரும்பப் பெறப்பட்டதும் விஜய் ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
