Headlines

வியட்நாம் ஜனாதிபதி தோ லாம் இலங்கையை வந்தடைந்தார்! இன்று நாடாளுமன்றத்தில் சிறப்புரை

வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளருமான தோ லாம் (To Lam), உத்தியோகபூர்வ விஜயமாக நேற்றிரவு (07) இலங்கையை வந்தடைந்தார்.

இந்தியாவுக்கான விஜயத்தை முடித்துக்கொண்டு, 209 பேர் கொண்ட தூதுக்குழுவினருடன் மும்பையிலிருந்து வியட்நாம் எயார்லைன்ஸ் விமானம் (VN-1) மூலம் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். இலங்கை மற்றும் வியட்நாம் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 55 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க விடுத்த அழைப்பின் பேரில் இந்த விஜயம் அமைந்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் வியட்நாம் ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்வது இதுவே முதல் முறையாகும்.

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (மே 08):

இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் அதிகாரபூர்வ வரவேற்பு நிகழ்வைத் தொடர்ந்து, இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையில் இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் மற்றும் பல முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன.

பின்னர் கொழும்பு பொது நூலக வளாகத்தில் உள்ள ஹோ சி மின் (Ho Chi Minh) சிலைக்கு மலரஞ்சலி செலுத்தும் வியட்நாம் ஜனாதிபதி, இன்று இலங்கை நாடாளுமன்றத்திலும் விசேட உரையாற்றவுள்ளார். மேலும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரதிநிதிகளையும் அவர் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெறும் இலங்கை-வியட்நாம் வர்த்தக, முதலீட்டு மற்றும் சுற்றுலா மன்றத்தில் கலந்துகொள்ளும் அவர், கொழும்புக்கும் வியட்நாமின் ஹோ சி மின் நகரம்/ஹனோய்க்கும் இடையிலான நேரடி விமான சேவைகளையும் (Vietnam Airlines & VietJet Air) உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளார். இந்த அனைத்து நிகழ்வுகளையும் முடித்துக்கொண்டு இன்று இரவு வியட்நாம் ஜனாதிபதி மற்றும் தூதுக்குழுவினர் தமது பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்புவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *