ஹட்டன்-டிக்கோயா பிரதான வீதியில் வட்டரகல எஸ்டேட் பகுதியில் இன்று பிற்பகல் (29) பயணிகள் போக்குவரத்து பேருந்து ஒன்று பாதையை விட்டு விலகி பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 20 பேர் காயமடைந்துள்ளனர்.
தயாகமவிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்கள் உட்பட சுமார் 20 பேர் டிக்கோயா மாவட்ட ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
டிக்கோயாவின் பட்டல்கல்ல எஸ்டேட் பகுதியில் உள்ள ஹட்டன்-போர்டைஸ் பிரதான வீதியில் இன்று மாலை 3.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்றபோது பேருந்து பாதையை விட்டு விலகி சுமார் 25 அடி பள்ளத்தில் விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.
டிக்கோயா மாவட்ட ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஒருவர், காயமடைந்த சுமார் 20 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் உறுதிப்படுத்தினார்.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஹட்டன் பொலிஸாரின் கூற்றுப்படி, சம்பவத்தின் போது சுமார் 35 பயணிகள் பேருந்தில் இருந்துள்ளனர்.
பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் இருவரும் காயமடைந்தவர்களில் அடங்குவர் என்று அத தெரண செய்தியாளர் கூறினார்.
