தமிழகப் பள்ளி மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில், ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை’ தமிழக முதல்வர் விஜய் இன்று (22) கோலாகலமாகத் தொடங்கி வைத்தார். கல்விக்கண் திறந்த காமராஜரின் பெயரால் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்திய முதல்வர் விஜய்யின் இந்தச் சிறப்பான நடவடிக்கை, கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலினால் ஆரம்பிக்கப்பட்டு அரச மற்றும் அரச உதவி பெறும் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வந்த காலை உணவுத் திட்டமானது, தற்போது 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களும் பயன்பெறும் வகையில் முதல்வர் விஜய்யால் மிகச் சிறப்பான முறையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அத்துடன், இத்திட்டத்திற்கு ‘பெருந்தலைவர் காமராஜ் காலை உணவுத் திட்டம்’ என அவர் பெயர்மாற்றம் செய்துள்ளமை, கல்வித் தந்தை காமராஜர் மீதான அவரது உயரிய மரியாதையையும் தொலைநோக்குப் பார்வையையும் காட்டுகிறது.
இந்தச் சிறப்பான விரிவாக்கத் திட்டத்தின் மூலம், 15,454 அரச மற்றும் அரச உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 15.30 இலட்சம் மாணவ மாணவிகள் பயனடையவுள்ளனர். சென்னை திருவான்மியூர் காந்தி கிராமத்தில் அமைந்துள்ள நடுநிலைப் பள்ளியிலேயே இந்தத் திட்டத்தை முதல்வர் விஜய் இன்று இனிதே தொடங்கி வைத்தார்.
தொடக்க விழாவின் போது மாணவர்களுக்கு வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல் மற்றும் சாம்பார் ஆகிய சுவையான உணவுகள் பரிமாறப்பட்டன. இந்நிகழ்வில் எந்தவொரு ஆடம்பரமும் பந்தாவும் இன்றி, மிகவும் எளிமையான முறையில் மாணவ மாணவிகளுடன் தரையில் சமமாக அமர்ந்து முதல்வர் விஜய் உணவருந்திய தருணம் காண்போரை நெகிழச் செய்தது. முதலமைச்சரின் இந்த அன்பான மற்றும் எளிமையான செயலைக் காட்டும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி, பலரது ஏகோபித்த பாராட்டுக்களையும் குவித்து வருகின்றன.
