Headlines

38 ஆண்டுகளின் பின் இலங்கை வந்த இந்தியப் பாதுகாப்பு அமைச்சர்: 3 நாள் விஜயத்தில் முக்கிய பேச்சுவார்த்தைகள்!

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று (08) இலங்கை வந்தடைந்த இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளுக்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இன்று சந்திக்கவுள்ளார். இந்தச் சந்திப்பு இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

நேற்று பிற்பகல் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்த அவருக்கு, பாதுகாப்புப் பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோர் சிறப்பான வரவேற்பளித்தனர். இதற்கமைய, அவர் செப்டெம்பர் 10 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார்.

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த விஜயம் அமைந்துள்ளது. தனது விஜயத்தின் போது, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொண்டா மற்றும் பல உயர்மட்ட அதிகாரிகளையும் அவர் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். கடந்த ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது கைச்சாத்திடப்பட்ட இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் அமுலாக்கம் குறித்தும் இதன்போது மீளாய்வு செய்யப்படும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 38 ஆண்டுகளின் பின்னர் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதல் விஜயம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியப் பாதுகாப்பு அமைச்சரின் விஜயத்தை முன்னிட்டு கொழும்பு போக்குவரத்துப் பொலிஸார் விசேட போக்குவரத்துத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளனர். அவர் பல்வேறு இடங்களுக்குப் பயணிக்கும் நேரங்களில் கொழும்பின் பல பிரதான வீதிகளில் அவ்வப்போது போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

இதேவேளை, கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமூக வரவேற்பு நிகழ்வொன்றில் நேற்று உரையாற்றிய ராஜ்நாத் சிங், நெருக்கடியான நேரங்களில் இந்தியா இலங்கைக்கு தனது முழுப் பலத்துடன் உறுதுணையாக இருக்கும் எனத் தெரிவித்தார். இலங்கையை இந்தியாவின் “மிக நெருங்கிய நண்பன்” என வர்ணித்த அவர், “வாழ்க்கையில் நண்பர்கள் மாறலாம், ஆனால் அண்டை நாடுகள் ஒருபோதும் மாறாது” எனக் குறிப்பிட்டு, இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று ரீதியான நெருக்கமான உறவுகளைப் பறைசாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *