Headlines

4 வருடப் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவும் உக்ரைனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: திருத்தந்தை லியோ வலியுறுத்து!

நான்கு ஆண்டுகளாகத் தொடரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து ரஷ்யாவும் உக்ரைனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என திருத்தந்தை லியோ (Pope Leo) திங்கட்கிழமை வலியுறுத்தியுள்ளார். அமைதியை நிலைநாட்ட ஐரோப்பியத் தலைவர்கள் சில விட்டுக்கொடுப்புகளைச் செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்ட சில மணிநேரங்களில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரான்ஸிற்கான நான்கு நாள் பயணத்தை முடித்துக்கொண்டு ரோம் திரும்பும் வழியில் விமானத்தில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய முதல் அமெரிக்கத் திருத்தந்தையான அவர், அணு ஆயுதங்கள் மற்றும் பேரழிவு தரும் போர்கள் குறித்துப் பேசத் தொடங்கியுள்ள உலகத் தலைவர்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தார்.

1.4 பில்லியன் உறுப்பினர்களைக் கொண்ட கத்தோலிக்கத் திருச்சபைக்கு, அமைதியையும் மனித உயிர்களுக்கான மரியாதையையும் நிலைநாட்ட வேண்டிய கடமை உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

“இந்த விழுமியங்களை மேம்படுத்த வேண்டிய பொறுப்பு திருச்சபைக்கு உள்ளது. ரஷ்யா, உக்ரைன் மற்றும் ஏனைய நாடுகளின் தலைவர்களை ஒன்றிணைந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தொடர்ச்சியாக அழைப்பு விடுக்கிறோம்” என்று அவர் கூறினார். மேலும், எவ்வித அர்த்தமுமற்ற இந்தப் போர்களைத் தொடராமல், பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிகளைத் தலைவர்கள் தேட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

“இது அரசியலோ அல்லது அரசியல் சார்பற்ற விடயமோ அல்ல. ஆயுதங்களுக்காகச் செலவிடுவதைக் குறைத்து, சுகாதாரம் மற்றும் கல்விக்காக அதிக நிதியைச் செலவிட வேண்டும். மனித மாண்பு மற்றும் உயிரின் மதிப்பைப் பாதுகாப்பதற்கான ஒரு குரல் அவசியமாகிறது,” எனவும் திருத்தந்தை லியோ சுட்டிக்காட்டினார்.

முன்னதாக பிரான்ஸின் மெட்ஸ் (Metz) நகரில் உரையாற்றிய அவர், ஐரோப்பியக் கண்டத்தின் எதிர்காலம் குறித்த தனது தெளிவான பார்வையை முன்வைத்ததுடன், அமைதியை அடைவதற்காக ஐரோப்பா சில விட்டுக்கொடுப்புகளைச் செய்ய முன்வர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *