கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் (CCD) தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள, “சும்மித்புர சத்து” என அழைக்கப்படும் பாதாள உலகக் குழு உறுப்பினர் கங்கனமகே திமுத்து சதுரங்க பெரேராவின் விசாரணைகளின் போது மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
சந்தேகநபர் வழங்கிய தகவலின் பேரில், வெல்லம்பிட்டிய செதவத்த பகுதியில் உள்ள கைவிடப்பட்ட வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ரிவோல்வர் ரக துப்பாக்கி ஒன்றை நேற்று (21) புலனாய்வு அதிகாரிகள் மீட்டனர்.
நாட்டை விட்டுத் தப்பிச் சென்று ஓமானில் தலைமறைவாகியிருந்த 28 வயதான குறித்த சந்தேகநபர், அங்கு கைது செய்யப்பட்டு கடந்த ஆகஸ்ட் 18 அன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.
அவரது வருகையைத் தொடர்ந்து, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் தடுப்புக் காவலில் வைத்து அவரிடம் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கு முன்னர் நடைபெற்ற விசாரணைகளின் போது, மட்டக்குளிய பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டதாக நம்பப்படும் ஒரு ரிவோல்வர் மற்றும் 12 தோட்டாக்களையும் CCD மீட்டிருந்தது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
