Headlines

லஞ்ச ஆணைக்குழுவால் கைது; முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க நீதிமன்றத்தில் ஆஜர்!

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழுவால் (CIABOC) இன்று (31) கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

தொடர்ந்து நடைபெற்று வரும் விசாரணையொன்று தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக ஆணைக்குழுவில் ஆஜரான பின்னரே, எம்பி கருணாநாயக்க இன்று கைது செய்யப்பட்டார்.

தேசிய லொத்தர் சபையின் விசேட திட்டமொன்றிற்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட மூன்று ஊழியர்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டதன் மூலம், அரசாங்கத்திற்கு நிதியியல் இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே CIABOC விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

முன்னதாக, வாக்குமூலம் அளிப்பதற்காக ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு எம்பி கருணாநாயக்கவிற்கு அறிவுறுத்தப்பட்டிருந்த போதிலும், அவர் அவ்வாறு செய்யத் தவறியிருந்தார்.

இதனையடுத்து, CIABOC அதிகாரிகள் அவரது இல்லத்திற்குச் சென்றிருந்தபோதும், அவர் வீட்டில் இருக்கவில்லை.

பின்னர், தமது மகளின் திருமண ஏற்பாடுகளில் அவர் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்டு, வாக்குமூலம் அளிப்பதற்கு அவரது சட்டத்தரணிகள் மற்றொரு திகதியைக் கோரியிருந்தனர்.

அதற்கமைய, இன்றைய தினம் அறிவித்தலுக்கு அமைய CIABOC முன் ஆஜரான பின்னரே, எம்பி ரவி கருணாநாயக்க கைது செய்யப்பட்டு, பின்னர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *