அம்பாந்தோட்டை நகர சபையின் முன்னாள் மேயரான எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ, பம்பலப்பிட்டியிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
57 வயதான அவரது சடலம் குடியிருப்பின் உள்ளே தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தற்கொலையாக இருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்த மரணம் தொடர்பான காரணங்களைக் கண்டறியும் நோக்கில் மேலதிக விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ, கடந்த 2014 ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் (UPFA) சார்பில் போட்டியிட்டு அம்பாந்தோட்டை நகர சபையின் மேயராக முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஆதரவோடு மீண்டும் அம்பாந்தோட்டை நகர சபை மேயராகப் பதவியேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
