Headlines

நான் போர்க்குற்றவாளி அல்ல; நாட்டுக்காகவே போரிட்டேன்” – ஜெனரல் சவேந்திர சில்வா!

இலங்கையின் இறுதிக்கட்டப் போரின் போது இராணுவம் செயற்பட்ட விதம் குறித்து எழுந்துள்ள போர்க்குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரித்துள்ள முன்னாள் இராணுவத் தளபதியும் பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரியுமான ஜெனரல் சவேந்திர சில்வா, தன் மீது மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள தடைகளையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

‘இம்பாக்ட் ஸ்டோரிஸ்’ (Impact Stories) என்ற யூடியூப் நிகழ்ச்சிக்கு அளித்த விரிவான செவ்வியின் போதே அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளால் தம்மீது விதிக்கப்பட்டுள்ள தடைகள் தொடர்பில் அதிருப்தி வெளியிட்ட அவர், தான் எந்தவொரு தவறிலும் ஈடுபடவில்லை என்றும், இராணுவச் சட்டங்களுக்கு அமையவே தனது செயற்பாடுகள் அமைந்திருந்தன என்றும் தெரிவித்தார்.

“நான் ஒரு போர்க்குற்றவாளி அல்ல. என் நாட்டுக்காகவே நான் போராடினேன். எனக்கு வழங்கப்பட்ட கடமையை நான் நிறைவேற்றினேன். நான் இராணுவ சட்டத்திற்கு முரணாகவோ அல்லது தவறாகவோ செயற்பட்டிருந்தால் மட்டுமே என்னை தண்டிக்க வேண்டும். எந்த அடிப்படையில் என்மீது தடை விதிக்கப்பட்டுள்ளது என நான் தொடர்ச்சியாகக் கேள்வி எழுப்பி வருகின்றேன்,” என்று அவர் கூறினார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பின் முன்னாள் போராளிகள் சுமார் 12,000 பேருக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டமையை சுட்டிக்காட்டிய சவேந்திர சில்வா, ஆயுதங்களை ஒப்படைத்தவர்களை அரசாங்கம் பாதுகாத்ததாகவும், அதேவேளை முன்னணியில் நின்று போரிட்ட தொழில்முறை இராணுவத்தினர் மீது உலகளாவிய ரீதியில் தடைகள் விதிக்கப்படுவது நியாயமற்றது என்றும் வாதிட்டார். அத்துடன், சர்வதேச சமூகமும் வெளிநாட்டு அமைப்புகளும் மூன்றாம் தரப்பு தகவல்களை மாத்திரம் நம்பியிருக்காமல், இலங்கை அதிகாரிகளுடன் நேரடியாகக் கலந்துரையாடி உண்மைகளைக் கண்டறிய வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.

2009 மே 18 ஆம் திகதியை தனது வாழ்வின் மிகவும் உணர்ச்சிகரமான மற்றும் முக்கியமான நாள் என்று விவரித்த அவர், “இலங்கை பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட அந்த நாளில் எனது படையணியே இறுதிக்கட்டப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தது. இன்று மக்கள் எந்தவொரு பேதமுமின்றி சுதந்திரமாக நடமாடுவதை இலங்கைப் படையினரே உறுதி செய்துள்ளனர். நான் பிறந்தமைக்கும், இராணுவத்தில் இணைந்தமைக்கும், எனது நாட்டுக்காக ஆற்றிய சேவையை நினைத்தும் வாழ்நாள் முழுவதும் பெருமையடைவேன்,” எனத் தெரிவித்தார்.

மேலும், இலங்கையின் பாதுகாப்பிற்கு இந்தியாவுடனான நெருக்கமான உறவு முக்கிய பங்காற்றியுள்ளதாகவும் அவர் தனது செவ்வியில் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *