ஹங்கேரியின் புடாபெஸ்டில் நடைபெற்ற உலக தடகள அல்டிமேட் சாம்பியன்ஷிப் போட்டியில் (World Athletics Ultimate Championship) ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற இலங்கை நட்சத்திர வீரர் ருமேஷ் தரங்க, இன்று காலை நாடு திரும்பினார்.
கடந்த செப்டம்பர் 13, 2026 அன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், உலகின் முன்னணி ஈட்டி எறிதல் வீரர்களுடன் போட்டியிட்ட ருமேஷ் தரங்க, தனது மூன்றாவது முயற்சியில் 87.11 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து முன்னிலை பெற்றார்.
பின்னர், தீர்க்கமான நான்காவது சுற்றில், பாரிய 91.09 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து தனது முதலிடத்தை வலுப்படுத்தினார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் 92.62 மீற்றர் தூரத்தை எறிந்து உலகளவில் சிறந்த தூரத்தைப் பதிவு செய்திருந்த ருமேஷ் தரங்க, இந்த ஆண்டின் டைமண்ட் லீக் (Diamond League) பட்டத்தையும் வென்றிருந்தார். இதனால், இப்போட்டியின் முன்னணி போட்டியாளராக அவர் களமிறங்கினார்.
ஜெர்மனியின் வெப்பர் (Weber), ருமேஷ் தரங்கவுக்கு கடும் சவாலாக அமைவார் எனக் கருதப்பட்டது. ஐரோப்பிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 90.40 மீற்றர் தூரத்தை எறிந்து புதிய சாதனை படைத்திருந்தார் வெப்பர்.
எனினும், அனைத்து சவால்களையும் முறியடித்து, ஹங்கேரியில் நடைபெற்ற போட்டியில் இலங்கை வீரர் ருமேஷ் தரங்க தங்கப் பதக்கத்தை வென்றார்.
