Headlines

சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவினரைச் சந்தித்தார் ஜனாதிபதி அநுர!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தூதுக்குழுவினருக்கும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (17) காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இந்தத் தூதுக்குழுவிற்கு IMF இன் தூதுக்குழுத் தலைவர் இவான் பாப்பாகியோர்கியோ (Evan Papageorgiou) தலைமை தாங்கினார்.

சமீபத்திய பொருளாதாரக் குறிகாட்டிகள் இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையை நோக்கிப் பயணிப்பதைக் காட்டுவதாக ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார். இந்த ஸ்திரத்தன்மையின் அடிப்படையில் நாட்டினை ஒரு உருமாற்ற சகாப்தத்தை நோக்கிக் கொண்டு செல்வதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை இதுவரை எட்டியுள்ள குறிப்பிடத்தக்க பொருளாதார முன்னேற்றங்களை IMF தூதுக்குழுவினர் இதன்போது பாராட்டினர். குறிப்பாக, அரச வருமானத்தை அதிகரிப்பதற்கும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கும், நிதி ஒழுக்கத்தைப் பேணுவதற்கும் சமீபகாலமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைத் தூதுக்குழுவினர் அங்கீகரித்துப் பாராட்டினர்.

இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கிய வலுவான அடித்தளத்திற்காக ஜனாதிபதி திஸாநாயக்க தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். இதுவரை அடைந்துள்ள முன்னேற்றங்களைப் பாதுகாத்துக்கொண்டு தொடர்ந்து முன்னோக்கிச் செல்வதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், இந்தப் பொருளாதார வெற்றிகளைப் பயன்படுத்தி மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைப்பதும், அவர்களின் வாழ்க்கை தரம் மற்றும் நிலைமைகளை மேம்படுத்துவதுமே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *